சென்னை:
தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக பொன்ராஜ் மீது பதியப்பட்ட வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த தவெக பெண் தொண்டர்களை இழிவாகப் பேசியதாக, அரசியல் விமர்சகரான பொன்ராஜுக்கு எதிராக தற்போதைய அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்குமார் ஆகியோர் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும், கடலூர் போலீஸாரும் பொன்ராஜ் மீது வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன்ராஜ் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என இடைக்கால தடை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இவ்வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அதையேற்ற நீதிபதி, விசாரணையை ஜூலை 6-க்கு தள்ளிவைத்துள்ளார். அதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.