அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சுயமாக முடிவெடுத்து ராஜினாமா செய்து வேறு கட்சிக்கு செல்கின்றனர்!! பிரவீன் சக்கரவர்த்தி கருத்து…

கோவை:
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சுயமாக முடிவெடுத்து ராஜினாமா செய்து வேறு கட்சிக்கு செல்கின்றனர் என காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

“அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து்விட்டு செல்வது அதிமுக – தவெக கட்சிக்குள் நடைபெறும் விஷயம். இதில் ஏதாவது, தவறு நடந்தால், அப்போது நாங்கள் பேசுவோம்.

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என அதிமுக எம்.பி இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் எந்த அடிப்படையில் மனு கொடுத்துள்ளார்?

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சொந்தமாக, சுயமாக முடிவெடுத்து ராஜினாமா செய்து வேறு கட்சிக்கு செல்கின்றனர்.

திமுகவினர் தவெக எம்.எல்.ஏ-க்கு பணம் கொடுத்து பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வலியுறுத்தியது தொடர்பாக வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது பணம் கொடுத்து வாங்குவதாகும். இதுதான் குதிரை பேரம். எம்.எல்.ஏ.க்கள் சுயமாக ராஜினாமா செய்து வேறு கட்சிக்கு செல்வது குதிரை பேரம் கிடையாது, அது குதிரை வேகம்.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வந்த 50 நாட்களில், ஊழல் குறைந்துவிட்டது. லஞ்சம் என்ற வார்த்தையே இல்லை என மக்கள் பேசுகின்றனர். இது எவ்வளவு பெரிய புரட்சி?

சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்துள்ளன என்பது தவறு. இதுவரை நடந்தது அப்படியே நடந்து கொண்டு இருக்கிறது.

பெண்கள் பாதுகாப்புக்கு சிங்கப்பெண் சிறப்புக் காவல் படை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இது அனைத்து மாவட்டத்துக்கு சென்றடைவதற்கு நேரம் ஆகும். 5 வருடங்களில் நடந்த சம்பவங்களை 50 நாட்களி்ல் ஒப்பிட்டு பார்ப்பது நியாயமா, சாத்தியமா? 50 நாட்களிலேயே லஞ்சத்தை ஒழித்து இருப்பது ஆச்சரியமானது.

கனிமொழி எம்.பியின் கருத்துக்கு எல்லாம் பதில் கூறிக் கொண்டு இருக்க முடியாது. 2026 தேர்தலில் மக்கள் தீர்வு தெளிவாக இருந்தது. மாற்றம் வேண்டும், திமுக எதிர்கட்சியில் அமர வேண்டும் என இருந்தது. எதிர்க்கட்சியில் செயல்பட திமுகவினர் ஏன் பயப்படுகின்றனர், பதறுகின்றனர்? எதைக் கண்டுபிடித்து விடுவார்கள் என பயம்?

திமுக, அதிமுக மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என ஏன் பதற்றப்படுகின்றனர்?

தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ளது. நேற்று தேநீர் விருந்து நடந்தது. இதில், கூட்டணிக் கட்சியினருக்கு உரிய மரியாதையும், மதிப்பும் கொடுத்தனர். 60 ஆண்டு காலத்தில் இதெல்லாம் நடந்தது கிடையாது. தவெக அரசு வந்த இந்த 50 நாட்களில் சிறப்பான தொடக்கம் நடந்துள்ளது” என்று அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *