கடப்பா:
கடப்பா மாவட்டம், ஜம்மலமுடுகு மண்டலம், சுண்ணப்பு ராள்ளபல்லி எனும் இடத்தில் ரூ.16,350 கோடியில் இரும்பு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.
மேலும், காணொலி மூலம் விஜயநகரம் மாவட்டம், ஜிந்தால் தொழில் பூங்காவை திறந்து வைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
இரும்பு தொழிற்சாலை திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததன் மூலம் ராயலசீமாவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. ராயலசீமா என்றால் வறட்சி பூமி அல்ல.
தண்ணீரின் ஊற்று ராயலசீமா. கடந்த ஆட்சியில் உயிரற்ற நிலமாக இருந்த இங்கு தற்போது தண்ணீர் ஊற்றி துளிர்க்க வைத்துள்ளோம்.
தற்போது தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள், முதலீடுகள் என ராயலசீமா மாவட்டங்கள் பிஸியாகி விட்டன.
இங்கு 1,100 ஏக்கர் நிலத்தை தொழிற்சாலைகளுக்காக வழங்கி உள்ளோம்.
இங்கு இரண்டு சீசனில் 2 மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிவாச வர்மா, பாஜக மாநில தலைவர் மாதவ், ஜம்மலமடுகு எம்எல்ஏ ஆதிநாராயண ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.