திமுக, அதிமுக கவுன்சிலர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் உட்கார்ந்து கொண்டு மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள் !! நிர்மல்குமார்….

மதுரை:
“மதுரை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் அனைவரும், கவுன் சிலராக ஆவதற்கு முன் எவ்வளவு சொத்து வைத்திருந்தனர்.

தற்போது எவ்வளவு சொத்துக்கள் வைத்துள்ளனர் என்ற சொத்து பட்டியலை வெளியிட தயாரா?” என்று அமைச்சர் நிர்மல் குமார் சவால் விட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் மாற்று கட்சியினர் தவெக-வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

அமைச்சர் நிர்மல்குமார், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாற்று கட்சியினரை வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தவெக-வின் வளர்ச்சியால் தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இரு கட்சிகளில் இருந்தும் கிளை கழகம் வரை கலைத்துவிட்டு தவெகவில் வந்து இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் என்ன நோக்கத்திற்காக கட்சியில் வந்து சேர்ந்து இருக்கிறார்களோ, அவர்கள் நோக்கம் நிறைவேறும். அவர்களுக்கான மரியாதையும், கவுரவமும் கொடுக்கப்படும்.

இன்று அரசியல் கட்சியினருக்கு மக்களுடன் கவுரவமாக பயணிக்க தவெக கட்சியை தவிர வேறு வழியில்லை.

மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் விஜய். அவரை பின்பற்றி மக்களுக்கு உண்மையாக பணியாற்றினால் நம்மையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். இந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் தவெக கட்சியினர் களம் இறங்க உள்ளார்கள்.

மக்களுடைய ஆதரவுடன் 100 சதவீதம் நமது வேட்பாளர்கள் வெற்றிப்பெறுவார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளாட்சிகளிலும் தவெக ஆட்சி நடக்கும்.

மக்களிடம் தவெக கட்சியினர் லஞ்சம் எதுவும் வாங்கப்போவதில்லை. மக்களோடு இன்று, நேற்று அல்ல. நமது நிர்வாகிகள், விஜய் ரசிகர் மன்ற காலத்தில் இருந்தே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 20 ஆண்டுகளாக பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதியாக வாய்ப்பு கிடைத்தால் இன்னும் அந்த பணியை சிறப்பாக செய் வார்கள். மக்களுக்கு சேவை செய்ய ஒரு அங்கீகாரத்தோடு போய் செய்வோம்.

மதுரை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் மக்கள் பணத்தை எவ்வளவு கொள்ளையடித்து இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மாநகராட்சி கூட்டத்தில் எங்களை நோக்கி அமைச்சர் எப்படி முறைகேடு செய்ததாக சொல்லலாம் என்றும், நாங்கள் முறைகேடு செய்யவில்லை என்றும் வாய் திறந்து சொன்னீர்கள் அல்லவா?

திமுக கவுன்சிலர்கள் அனைவரும் தங்கள் சொத்து பட்டியலை வெளியிடத் தயாரா? கவுன்சிலராக வெற்றிப்பெறுவதற்கு முன் எவ்வளவு சொத்துகள் வைத்திருந்தனர், வெற்றி பெற்ற பிறகு தற்போது எவ்வளவு சொத்துகள் வைத்துள்ளனர் என்ற சொத்து விவரங்கள் பட்டியலை அவர்கள் வெளியிடத் தயாரா?.

திமுக கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு கட்டிடங்கள், எத் தனை வணிக வளாகங்கள், எவ்வளவு வீடுகள் வைத்துள்ளனர் என்று மக்களே சொல்கிறார்கள். சாலையோர கடைகள் வரை சென்று திமுக கவுன்சிலர்கள் ரூ.500 முதல் ரூ.1,000 வரை வசூல் நடத்தியுள்ளனர்.

இன்னும் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் உட்கார்ந்து கொண்டு மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். முதல்வர் விஜய் கூறியுள்ளதை போல், யாரும் தற்போது லஞ்சம் கொடுக்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *