குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் நானே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் – விஜயபாஸ்கர் ஆவேசம்…!!!

வெயிலால் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூட வாய்ப்புள்ளதாகவும், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நகர கழகம் சார்பில் அண்ணா சிலை அருகே கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பலாப்பழம், தர்பூசணி, குளிர்பானங்கள், நீர்மோர், பானகம், ஜூஸ் வகைகள் உள்ளிட்டவை

பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தினந்தோறும் தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளரிடம் பேசிய விஜயபாஸ்கர் கூறியதாவது :- தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் சுகாதாரத்துறை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. வெயிலால் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூட வாய்ப்புள்ளது. உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பறவை காய்ச்சல் உள்ளனவா..? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். எல்லை பகுதிகளில் தீவிர பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய அளவிலான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். நானே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி பழ வகைகள் இயற்கையாக பழுக்க வைக்கப்படுகிறதா..? செயற்கையாக பழுக்க வைக்கப்படுகிறதா..? என்பதை குறித்து சோதனையில் ஈடுபட வேண்டும்.

சுகாதாரத்துறை விழிப்போடு செயல்பட்டு இருந்தால் பொது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும், வினாக்களும் எழுவதற்கு வாய்ப்பு இல்லை. பொதுமக்களுக்கு இடம் சந்தேகங்களுக்கு சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து பதில் அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *