ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் கஜூரியா லாஹ்சி என்ற பெயரில் அணை ஒன்று உள்ளது. இதன் மீது இளம்பெண் ஒருவர் நின்று கொண்டு அணைக்குள் குதித்து தற்கொலை செய்வதற்காக தயாராக நின்றுள்ளார்.
இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பெரும் கூட்டம் கூடியது. அவர்களை பார்த்ததும் அந்த இளம்பெண் அழுதபடியே, தற்கொலை செய்வதற்காக அணையின் முனைப்பகுதிக்கு சென்றார்.
அவர் அணையில் குதிப்பதற்காக கம்பியை பிடித்தபடியே, நீரை பார்த்து கொண்டு நின்றபோது, திடீரென இளைஞர் ஒருவர் மேலே இருந்து கீழே குதித்து, ஓடி சென்று இளம்பெண்ணை பிடித்து கொண்டார்.
அவரின் பிடியில் இருந்து விடுபடுவதற்காக இளம்பெண் முயற்சித்து இருக்கிறார். அப்போது, மற்றொரு நபரும் கீழே குதித்து, இளம்பெண்ணை தற்கொலை செய்ய விடாமல் பிடித்து கொண்டார்.
தொடர்ந்து மற்றொருவரும் உதவிக்கு வந்துள்ளார். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. புத்திசாலித்தனத்துடன் அந்த இளைஞர் துரித கதியில் செயல்பட்டு, இளம்பெண்ணை காப்பாற்றிய செயலை அனைவரும் பாராட்டினர்.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இந்த காட்சி இளைஞரின் துணிச்சலுக்கான அடையாளங்களில் ஒன்றாக இருப்பதுடன், தற்கொலையை தடுக்கும் நோக்கில் செயல்பட்டதற்கான அடையாளங்களில் ஒன்றாகவும் உள்ளது.