குரு பூர்ணிமாவை முன்னிட்டு வியாஸ பூஜை!!

சென்னை:
சிருங்கேரி சாரதா பீடத்தின் பீடாதிபதி பாரதி தீர்த்த சங்கராச்சார்ய சுவாமிகள், 52-வது சாதுர்மாஸ்ய விரதத்தை தமது சிஷ்யரான விதுசேகர பாரதி சுவாமிகளுடன் சிருங்கேரியில் மேற்கொண்டுள்ளார்.

ஈஸ்வரனால் வேதம் உபதேசிக்கப்பட்டது. வழிவழியாக குரு – சிஷ்ய பரம்பரையாக வேதம் இன்று வரை காப்பாற்றப்பட்டு வருகிறது.

முழுமையாக இருந்த வேதத்தை பிற்கால சந்ததியினர் எளிதாக கற்க திரேதா யுகத்தில் வாழ்ந்த பகவான் வேத வியாஸர், வேதத்தை 4 பாகங்களாக ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய பெயர்களில் பிரித்துக் கொடுத்தார்.

கடலுக்கு ஒப்பானது வேதம். அதைப் பிரிப்பது எளிதான காரியம் இல்லை. அந்த அரியச் செயலை செய்து நமக்குக் கொடுத்தது மட்டுமின்றி, புராணங்கள், மகாபாரதம், பிரம்மசூத்திரம், போன்ற அரிய நூல்களை நமக்குக் கிடைக்கச் செய்தவர்தான் ஆதி குருவான பகவான் வேத வியாஸர். இவர் வசிஷ்ட முனிவரின் வழித் தோன்றல்.

சனாதன இந்து மதத்துக்கு பகவான் வேத வியாஸர் அன்று செய்த உதவிக்காக அவரது தியாக மனப்பான்மையைப் போற்றி நன்றி செலுத்துவதற்காக ‘குரு பூர்ணிமா’ என்கிற வியாச பூஜையை கொண்டாடுவது நம்முடைய பாரம்பரிய வழக்கம்.

முற்றும் துறந்த சந்நியாசிகளுக்கு பல்வேறு நியமங்கள், கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த புனிதமான சாதுர்மாஸ்ய விரதத்தைக் கடைபிடிப்பது.

ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு, ‘வியாஸ பூர்ணிமா’ அல்லது ‘குரு பூர்ணிமா’ என்று பெயர். அன்று சந்நியாசிகள், அவரவர் குரு பரம்பரைக்கு ஏற்ப வியாஸ பூஜையை முடித்துவிட்டு, விரத சங்கல் பத்தைச் செய்துகொண்டு, நான்கு பட்சங்கள் (2 மாதங்கள்) ஒரே இடத்தில் தங்கி இருப்பர்.

இந்த புண்ணிய காலத்தில் குருவை வணங்கி, அவர்களின் அருளைப் பெறுவதுதான் நமது பண்பாடு.

இந்த ஆண்டு 52-வது சாதுர்மாஸ்ய விரதத்தை சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதி தீர்த்த சங்கராச்சார்ய சுவாமிகள், தமது சிஷ்யரான விதுசேகர பாரதி சுவாமிகளுடன் சிருங்கேரியில் மேற்கொண்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *