கொல்கத்தா:
யார் உண்மையான திரிணமூல் காங்கிரஸ் கட்சி என்ற பிரச்சினை க்கு விரைவில் முடிவு கட்டுங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, 80 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியைப் பாஜகவிடம் பறிகொடுத்தது.
வெற்றி பெற்ற 80-ல் 60 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தி குழுவின் தலைவர் ரிதபிரதா பானர்ஜி தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
“நாங்கள் தான் அதிக எண்ணிக்கையிலான எம்எல்ஏ-க்களைக் கொண்டுள்ளோம். எனவே, எங்களை உண்மையான திரிணமூல் காங்கிரஸ் கட்சி என அறிவிக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்துக்கு ரிதபிரதா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“உண்மையான திரிணமூல் காங்கிரஸ் கட்சி நாங்கள் தான். இதில் சிலர் தாங்கள்தான் உண்மையானவர்கள் என்று கட்சியை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் கலகம் விளைவிப்பதற்காக இத்தகைய செயலை சிலர் செய்து வருகின்றனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர், கட்சி சின்னம், கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாடு ஆகியவை தொடர்பான விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் 2 முறை அவகாசம் அளித்து அறிவுறுத்திய போதும் ரிதபிரதா பானர்ஜி விளக்கம் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அனுப்பிய கடிதத்தில்
ஜூலை 25-ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். தற்போது ஜூலை 25-ம் தேதியும் கடந்துவிட்டது.
ரிதபிரதா பானர்ஜி தனது விளக்கத்தை சமர்ப்பித்தாரா இல்லையா என்பது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை அவர் பதிலளித்திருந்தால், அதன் நகல் எதுவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
கால அவகாசம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டும் எதிர் தரப்பினர் பதிலளிக்கத் தவறியுள்ளனர். எதிர்தரப்பினருக்குத் தொடர்ந்து கால நீட்டிப்பு வழங்கப்படுவது எங்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.
அந்த கூடுதல் கால அவகாசம் மூலம் அவர்கள் தங்களுக்கு ஆதரவான ஆவணங்களை போலியாகத் தயாரிக்கலாம். இது தடுக்கப்பட வேண்டும்.
எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக தேர்தல் ஆணையம் முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.