சென்னை:
“மேகதாட்டு அணை குறித்து கர்நாடக அரசின் திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கை இதுவரை மத்திய நீர் ஆணையத்துக்கு வந்து சேரவில்லை” என்று மநீம தலைவர் கமலஹாசன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன், “மேகேதாட்டு திட்டத்துக்காக திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதா? இத்திட்டத்தால் தமிழகத்தின் பாசன வசதி மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என ஆய்வு செய்யப்பட்டுள்ளதா?” என கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இக்கேள்விகளுக்கு மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: கர்நாடக அரசு 2019-ஆம் ஆண்டு சமர்ப்பித்த மேகதாட்டு அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.
இதுவரை அத்தகைய திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கை எதுவும் மத்திய நீர் ஆணையத்திற்கு வந்து சேரவில்லை. காவிரிப் படுகையில் அமையும் நீர் திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகளை மத்திய நீர் ஆணையம் பரிசீலிக்கும் போது, மத்திய நீர் ஆணையத்தின் நடைமுறை வழிகாட்டுதல்கள், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 2018 பிப்ரவரி 16 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல், மின்துறை தொடர்பாக மற்றொரு கேள்வியும் எழுப்பியிருந்தார்.
இக்கேள்விகளுக்கு மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் அளித்த பதில்: கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் உச்சகட்ட மின் தேவைகள் அனைத்தும் 100 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை 0 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் துணை மின்நிலையங்களைப் புதுப்பிக்கவும், பேட்டரி சேமிப்பு அமைப்புகளை அமைக்கவும் ரூ.785.21 கோடி மானியத்தில் 10 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.9,235 கோடியும், மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்க ரூ.9,568 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 8.38 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இணைக்க திட்டமிடப்பட்டு, அதில் 2.38 கிகாவாட் திட்டங்கள் தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்றார்.