தஞ்சாவூர்:
உதயநிதி விவகாரத்தால் தஞ்சாவூரில் இன்று திமுக – தவெகவினர் இடையே செருப்பு, கல் வீச்சு மோதல் சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், திமுகவினர் சாலை மறியலிலும், முதல்வரின் உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் தவெகவினர் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் திமுக சார்பில் நேற்று காவிரி விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வரை கண்டித்தும், அவரை தரகுறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இந்த பேச்சுக்குக்கு தவெக மற்றும் பிற அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், நேற்று தவெக தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் முதல்வர் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சென்னை சென்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, உதயநிதி கைது நடவடிக்கையை கண்டித்து திமுகவினர் இன்று ரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை பகுதிக்கு ஊர்வலமாக சென்று, அங்கு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் டிகேஜி.நீலமேகம், எம்.ராமச்சந்திரன், மேயர் (பொறுப்பு) அஞ்சுகம் பூபதி, மாநகர செயலாளர் சண்.ராமநாதன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.
அப்போது, முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து, முதல்வருக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தவெக மகளிர் அணியினர் பனகல் கட்டிடம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக எம்எல்ஏ ஆர்.விஜய் சரவணன் உள்ளிட்ட ஏராளமான தவெகவினர் கலந்துகொண்டனர்.
திமுகவினர் அண்ணாசிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டபோது, தவெகவினர் அண்ணாசிலை நோக்கி திமுகவினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்தனர்.
இதையடுத்து திமுகவினரும், தவெகவினரும் ஒருவர் மீது ஒருவர் கூச்சலிட்டபடி செருப்பு, கற்களை வீசிக மோதிக் கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.