தமிழக முதல்வர் விஜய் தலைமையில் “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்பு!!

சென்னை:
தமிழக முதல்வர் விஜய் தலைமையில் “போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து ‘போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்’ விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த முதல்வர், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு”- மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னர் முதல்வர் விஜய், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ‘போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்’ விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு நடவடிக்கைகளை காணொலி மூலம் பார்வையிட்டார்.

தொடர்ந்து, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2026-ம் ஆண்டிற்கான போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் பணிக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

மேலும், போதைப்பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் தலா 3 சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தலா 3 சிறந்த தன்னார்வலர் குழுக்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

தமிழக அரசு போதைப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக எவ்வித சகிப்புத் தன்மைக்கும் இடமளிக்காத, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வழக்கமான காவல் துறை அணுகுமுறையை மாற்றி, “முழு அரசும் – முழுச் சமூகமும்” பங்கேற்கும் புதிய பன்முகக் கட்டமைப்பை முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில், இன்றைய தினம், முதல்வர் விஜய் தலைமையில் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு”- மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில், 2,000 மாணவர்கள் நேரிலும், 37 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து சுமார் 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணொலி வாயிலாகவும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதுதவிர, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரவர் கல்வி நிறுவனங்களில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இவர்களுடன் இணைந்து மாணவர்களின் பெற்றோர், தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மருத்துவர்கள், போதைப்பொருள் மறுவாழ்வு மையங்களில் சிகிச்சையில் உள்ளவர் கள், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் மற்றும் இதர பொதுமக்கள் பெருந்திரளாய் போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *