ஒருநாள் நான் ஆட்சிக்கு வந்தால் மூன்று விஷயத்தை தடை செய்துவிடுவேன் – கார்த்தி சிதம்பரம்!

ஏப்ரல் 19ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் சிவகங்கையில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த கார்த்தி சிதம்பரம், மாநில அரசுகளுக்கான வரி பகிர்வு குறித்து பேசியிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அவர் பேசியதாவது:-

நம்மூரில் தவறான பொருளாதார புரிதல் இருக்கிறது. அதாவது பணக்காரர்கள் மட்டும்தான் வரி கட்டுகிறார்கள். மற்றவர்கள் வரி கட்டுவதில்லை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது தவறு. இந்தியாவில் உள்ள 140 கோடி பேரும் வரி கட்டுகிறோம்.

சோப்பு, சீப்பு, கண்ணாடி, சூடம் என எது வாங்கினாலும் நாம் வரியை கட்டுகிறோம். வரி கட்டாத பொருளே கிடையாது. ஆனால் நாம் ரூ.1 வரியாக கட்டினால் நமக்கு திருப்பி கிடைப்பது வெறும் 29 பைசா மட்டும்தான்.

ஆனால், வட இந்தியாவில் இந்தி பேசும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், அவர்கள் ரூ.1 வரியாக செலுத்தினால், அவர்களுக்கு திருப்பி 2 ரூபாய் 73 காசு கொடுக்கப்படுகிறது.

அப்படியெனில் நீங்கள் உழைத்து சம்பாதித்து சேர்த்து வைத்து பொருள் வாங்கும் போது கொடுக்கப்படும் வரியானது, நமக்கு 29 பைசாவாகவும், வட மாநிலத்திற்கு 2 ரூபாய் 73 காசாகவும் செல்கிறது. நம்ம பணம் நம்மிடம் வர வேண்டும் எனில் மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். இந்த மாற்றத்திற்கு நீங்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்

இந்த தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தி மொழியைதான் பிரதானப்படுத்துவார்கள்.

நமக்கு அது ஒத்துவராது. நமக்கு தமிழ் முக்கியம். அதேபோல அவர்கள் இந்துத்துவா கொள்கையை பின்பற்றுகிறார்கள். அப்படியெனில் இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்பதுதான்.

இந்துக்களை தவிர மற்றவர்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்குவதுதான் அவர்களின் நோக்கம். மட்டுமல்லாது இந்துத்துவா என்று சொல்பவர்களின் பழக்க வழக்கங்களுக்கும், நம்முடைய பழக்க வழக்கங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கிடா வெட்டுவதற்கும், சேவலை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. அதேபோல பாஜக ஆட்சிக்கு வந்தால் தடை விதிக்கப்படும்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கேபிள் டிவிக்கான கட்டணம் வெறும் ரூ.55தான். ஆனால் இன்று இந்த விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு பாஜக அரசுதான் காரணம். இதுதவிர சோப்பு, சீப்பு, ஷாம்பு என எல்லாவற்றின் விலையும் உயர்ந்ததற்கான காரணம் பாஜகதான்.

ஒருநாள் நான் ஆட்சிக்கு வந்தால் மூன்று விஷயத்தை தடை செய்துவிடுவேன். குழந்தைகளுக்கான ஹோம்வொர்க், டியூஷன், எக்ஸாம் என மூன்றையும் நான் தடை செய்துவிடுவேன். இதற்கு நான் ஆட்சிக்கு வரவேண்டும். அது சாத்தியமா என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *