சென்னை:
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், நாட்டின் உணவுப் பாதுகாப்பின் அடிப்படையாகவும் திகழ்வது விவசாயத் துறை. கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கும் உழவர் பெருமக்க ளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதிலும் குறைந்தபட்ச ஆதார விலை (Minimum Support Price – MSP) மற்றும் அரசு வழங்கும் ஊக்கத் தொகைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
விவசாய விளைபொருட்களின் சந்தை விலை குறையும் காலங்களில், விவசாயிகள் நஷ்டமடையாமல் பாதுகாப்பதே குறைந்தபட்ச ஆதார விலையின் முதன்மை நோக்கமாகும்.
இந்நிலையில், நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத் தொகையை உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
எனினும், சன்ன ரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு ஓரளவு திருப்தி அளித்திருந்தாலும், பொது ரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை ஏமாற்றத்தை அளித்துள்ளது.
2025-2026 சாகுபடி ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை நிர்ணயித்த மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதார விலையைப் பொது ரகத்துக்கு ரூ.2,369 என்றும், சன்ன ரகத்துக்கு ரூ.2,389 என்றும் உயர்த்தியபோது, மாநில அரசும் ஊக்கத்தொகையை உயர்த்தியது.
அதன்படி, பொது ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.131 மற்றும் சன்ன ரகத்துக்கு ரூ.156 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு, பொது ரகம் ரூ.2,500 என்றும் சன்ன ரகம் ரூ.2,545 என்றும் கொள்முதல் செய்யப்பட்டது.
நடப்பு 2026-2027 சாகுபடி ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் கடந்த மே மாதம் அறிவித்த மத்திய அரசு, குவிண்டாலு க்கு ரூ.72 வரை கூடுதல் விலை நிர்ணயம் செய்து, பொது ரக ஆதார விலையை ரூ.2,441 ஆகவும் சன்ன ரக ஆதார விலையை ரூ.2,461 ஆகவும் உயர்த்தியது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், மாநில அரசின் ஊக்கத்தொகையாகச் சன்ன ரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.289 மற்றும் பொது ரக நெல்லுக்கு ரூ.159 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், நடப்பு பருவத்தில் சன்ன ரக நெல்லின் மொத்தக் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,750 என்றும், பொது ரக நெல்லின் விலை ரூ.2,600 என்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாகச் சன்ன ரக நெல்லுக்கு ரூ.156 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.133 சேர்க்கப்பட்டு ரூ.289 என ஊக்கத்தொகை உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தவெகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிபடி, நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.3500 ஆக உயர்த்தப்படும் என்று விவசாயிகள் நம்பியிருந்தனர்.
எனினும், இப்போதைய அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. சன்ன ரக நெல்லுக்கான ஊக்கத் தொகை அறிவிப்பு கூட ஓரளவு திருப்திகரமாக இருக்கிறது.
இருப்பினும், பொது ரக நெல்லுக்கு முன்பு வழங்கப்பட்ட ரூ.131 ஊக்கத்தொகையை விட வெறும் ரூ.28 மட்டுமே உயர்த்தப்பட்டு ரூ.159 என நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சன்ன ரகத்துக்கும் பொது ரகத்துக்குமான கொள்முதல் விலை வித்தியாசம் முன்பு ரூ.45 ஆக இருந்த நிலை மாறி, தற்போது ரூ.150 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகளில் சன்ன ரக நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளை விட, பொது ரக நெல் உற்பத்தி செய்வோரே அதிகம்.
எனவே, இந்த விலை இடைவெளியைக் குறைக்கும் வகையில், பொது ரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகையை குறைந்தபட்சம் ரூ.159லிருந்து ரூ.259 அளவுக்கேனும் உயர்த்த வேண் டும் என்பதே விவசாயிகளின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.