சென்னை:
காவிரி நதி நீர், மேகேதாட்டு அணை என பல பிரச்சினைகளுக்கு எதிராக போராடுகிறோம்.
எனவே, எங்களுக்கு ஒவ்வொரு நாளும் போராட்டமே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி முன்னெடுப்பில், அனைத்துக் கட்சிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாறன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: காவிரி நதி நீர் பிரச்சினையை ஒவ்வொரு ஆண்டும் எதிர்கொள்கிறோம்.
புதியதாக மேகேதாட்டு பிரச்சினை, தொகுதி மறுவரையறை பிரச்சினை, போதை மிகுதியால் நடக்கும் படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராடுகிறோம்.
எனவே, எங்களுக்கு ஒவ்வொரு நாளும் போராட்டமே. தமிழ் தேசிய இனத்தின் பிள்ளைகள் என்ற அரசியல் குடையின் கீழ் ஒன்றிணைந்து, வலிமையான அரசியல் படையாக ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.
மேகமலையில் பல தலைமுறைகளாக வாழும் மக்களை அகற்றுவது பெரிய துன்பம். மேகமலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போது அதை எப்படி ஆக்ரமிப்பு என்று கூற முடியும். அப்போது நடவடிக்கை எடுக்காமல் தற்போது நடவடிக்கை எடுப்பது எந்த வகையில் நியாயம்?இவ்வாறு அவர் கூறினார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், “மாஞ்சோலை, மேகமலை மக்கள் யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்கவில்லை.
எனவே, இம்மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை, எங்களால் அந்த மக்களை வெளியேற்ற முடியாது என உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
மாஞ்சோலை மக்களின் வாழ்விடத்தை மாற்றக்கூடாது என வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில், வரும் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். செப். 2-வது வாரத்தில் மேகமலை மக்களுக்காக போராட்டம் நடைபெறும்” என்றார்.
தவாக தலைவர் தி.வேல்முருகன் கூறுகையில், “கர்நாடகாவில் வனப்பகுதியில் 3 தமிழர்களை வனத்துறையினர் சுட்டுகொன்றுள்ளனர்.
இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை கர்நாடக காவல்துறை காட்டுமிராண்டித் தனமாக தாக்கியுள்ளது. 5 பேரை கைது செய்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு 24 மணி நேரம் கடந்தும் தமிழக முதல்வரிடம் இருந்து கண்டனம் வரவில்லை.
உடனடியாக, தமிழக கூடுதல் தலைமைச்செயலர், கூடுதல் காவல்துறை இயக்குநர் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி, கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி,
இந்த படுகொலைகளுக்கு வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய, தமிழக முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார்.