சென்னை:
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தும் அறிவிப்பை இன்று சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில் வெளியிட அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு. தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டசபையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை விவாதம் இன்று எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.
உயிர்காக்கும் துறையான சுகாதாரத்துறைக்கு முதல்வர் அதிக முக்கியத்துவம் தருவார் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும், சுகாதாரத்துறையின் சாதனைகள் குறித்து பெருமையாக பேசுவதையும், கரவொலி எழுப்புவதையும் மட்டுமே வழக்கமாக வைத்திருந்தனர்.
ஆனால் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவில்லை. கடந்த திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் நலனுக்கான எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.
தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள முதல்வர் விஜய், சுகாதாரத்துறையை வலுப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 37 அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
குறிப்பாக அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், அனைத்து சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவத் துறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இது போன்ற நடவடிக்கைகளை முனைப்புடன் செய்தால் தமிழகத்தில் நிச்சயம் மிகப்பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்த முடியும்.
தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களின் சேவை யை அங்கீகரிக்கும் வகையில் அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி ஊதியம் வழங்க வேண்டும்.
கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா, அரசு வேலை கேட்டு கடந்த 5 ஆண்டுகள் கண்ணீர் சிந்திய பிறகும் திமுக அரசு கருணை காட்டவில்லை.
திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலை உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகள் குறித்த அறிவிப்பை சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.