ஊதியம் வழங்காததை கண்டித்து கோவை செம்மொழிப் பூங்கா ஊழியர்கள் 250 பேர் இன்று திடீரென தர்ணா!!

கோவை:
ஊதியம் வழங்காததை கண்டித்து கோவை செம்மொழிப் பூங்கா ஊழியர்கள் 250 பேர் இன்று திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

கோவை, காந்திபுரத்தில், மத்திய சிறைச்சாலை அருகே மாநகராட்சி சார்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் நூலகம், குழந்தைகள் விளையாடும் இடங்கள், மூலிகை தோட்டங்கள் மற்றும் ஏராளமான தாவரங்கள், மரங்கள் உள்ளன.

இவற்றைச் சுற்றி பார்ப்பதற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.

செம்மொழிப் பூங்காவை பராமரிப்பதற்கு தூய்மைப் பணியாளர்கள், தோட்ட ஊழியர்கள், காவலர்கள் என 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 18) அதிகாலை முதல், செம்மொழிப் பூங்காவிற்கு வந்த ஊழியர்கள் பணிக்குச் செல்லாமல் பூங்காவில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதில் ஆண், பெண் தூய்மைப் பணியாளர்கள், காவலாளிகள், தோட்டப் பராமரிப்பு ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

சீருடை அணிந்தபடி தரையில் அமர்ந்து ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதனிடையே, போராட்டம் தொடர்பாக ஊழியர்கள் கூறியதாவது, “கோவை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்துவந்து இங்கு பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு மாதம் 20 ஆயிரம் ஊதியம் என்று கூறினார்கள். ஆனால் பல்வேறு பிடித்தம் போக 16 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுக்கிறார்கள்.

கடந்த மாதம், 14ம் தேதிதான் ஊதியம் கொடுத்தார்கள். இந்த மாதம் இதுவரை ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை. கேட்டால் மேலே அனுப்பி உள்ளோம் என்று கூறுகிறார்கள்.

ஊதியம் வழங்கப்படாததால் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே தான் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.” என்று கூறினர்.

போராட்டம் குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காட்டூர் போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் இன்று காலை அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் செம்மொழிப் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு மற்றும் பராமரிப்பு பாதிப்பு ஏற்படும் என்பதால அதிகாரிகள் ஊழியர்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *