ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பரமத்தி வேலூரில் பாசன விவசாய சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!!

நாமக்கல்:
ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பரமத்தி வேலூரில் பாசன விவசாய சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் உண்ணாவிரதப் போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கத்தினர் கடைகளை அடைத்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றை ஒட்டி ராஜவாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.

இந்த வாய்க்கால் ஜேடர்பாளயைம் தொடங்கி பரமத்தி வேலூர், மோகனூர் வழியாக திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

இதன் மூலம் நேரடியாக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் திறக்கப்படும்.

மார்ச் மாதம் மட்டும் வாய்க்கால் பராமரிப்புக்காக தண்ணீர் நிறுத்தப்படும். இந்நிலையில், இந்தாண்டு எவ்வித முன்னறிப்பும் இன்றி கடந்த ஜூலை 29ம் தேதி 3-வது முறையாக ராஜவாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இதைக் கண்டித்து விவசாயிகள் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

எனினும், வாய்க்காலில் திறக்கப்படவில்லை. இச்சூழலில் ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பாசன விவசாய சங்கத்தினர் இன்று (ஆக.20-ம் தேதி) உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.

இதற்கு பரமத்தி வேலூர் சுற்றுவட்டார வணிக நிறுவனத்தினர் ஆதரவு தெரிவித்து கடைகளை மூடுவதாகவும் அறிவித்தனர்.

இதற்கிடையே, நேற்று பரமத்தி வேலூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அப்புசாமி, உதவி செயற் பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் விவசாயிகள் சங்க நிர்வாகிகளை நேரில் அழைத்து நீர்வளத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும். கூடிய விரைவில் ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதை ஏற்க மறுத்த விவசாயிகள் சங்கத்தினர் ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும், இல்லையெனில் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் மற்றும் கடையடைப்பு நடத்தப்படும்” என்றனர்.

இதன்படி இன்று காலை 8 மணி முதல் பரமத்தி வேலூர்- மோகனூர் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு விவசாய சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேறபட்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு நன்செய் இடையாறு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் என்.எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார்.

போராட்டத்தில் ராஜவாய்க்கால் பாசனத்தை நம்பி சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகி வருகுிறது. எனவே ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே பரமத்தி வேலூர் அனைத்து வணிகர் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளனர்.

பரமத்தி வேலூர் முழுக்கு ஒரு சில மருந்தகங்களை தவிர பெரும்பாலன கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *