சென்னை:
எம்எல்ஏ.க்களுக்கு ரூ.34 லட்சத்தில் வாகனம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக புதிய கார்கள் தலைமைச் செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் அனைத்து எம்எல்ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும். தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ரூ.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நேற்று முன்தினம் அறிவித்தார்.
அதை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன்படி, தனியார் நிறுவனத்தின் 6 விதமான கார்களின் மாடல்கள் தலைமைச் செயலக வளாகத்துக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டன.
அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுதவிர இன்னும் சில தனியார் நிறுவனங்களின் கார் மாடல்களும் அடுத்து கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாடல் கார்கள் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டு தகுதியானதை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படும் மாடலில் 234 கார்கள் வாங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை விலையில் கார்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.