சென்னை:
“மகளிரை தொழில்முனைவோராக்க ரூ.7,015 கோடியில் ‘சிங்கப்பெண்கள் கடன் திட்டம்’ செயல்படுத்தப்படும்” என கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.
அப்போது கூட்டுறவுத் துறை தொடர்பாக பதிலளித்த அமைச்சர் வ.காந்திராஜ் 39 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:
மகளிரைத் தொழில்முனைவோராக்க புதிதாக ‘சிங்கப்பெண்கள் கடன் திட்டம்’ ரூ.7,015 கோடியில் கூட்டுறவு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும்.
ஊரகத் தொழில் கடன்
விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் ஊரகத் தொழில் கடன் 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, சந்தைப் பங்கை அதிகரித்து, லாபத்தை உயர்த்த ‘வெற்றி’ என்ற பொதுவான வணிகச் சின்னம் அறிமுகப்படுத்தப்படும்.
ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் 3,452 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நுண் தானியங்கி சாதனங்கள் நிறுவப்படும்.
விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்த ரூ.50 கோடி மதிப்பீட்டில் பண்ணைக் கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும்.
வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் மஞ்சள், முருங்கை மற்றும் மிளகு ஆகிய விளை பொருட்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஏற்றுமதி செய்யப்படும்.
10 ஆயிரம் நியாயவிலைக் கடைகளுக்கு யுபிஐ பணப்பரிவர்த்தனை நடைமுறைகள் விரிவுபடுத்தப்படும்.
தொடக்க கூட்டுறவு வேளாண் மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் விவசாயிகளுக்கு, நீண்டகால கடன் வழங்கும் திட்டம் ரூ.50 கோடி அளவுக்கு மீண்டும் தொடங்கப்படும்.
டான்பெட் நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள் மற்றும் விதைகள் விற்பனை ரூ.2,500 கோடிக்கு அதிகரிக்கப்படும். வேளாண் விளைபொருள் ஈட்டுக் கடன் ரூ.115 கோடியில்இருந்து ரூ.300 கோடியாக அதிகரித்து வழங்கப்படும்.
100 நியாயவிலைக் கடைகள் ரூ.7.67 கோடி மதிப்பீட்டில், பல்நோக்கு சில்லறை விற்பனை நிலையங்களாக மாற்றி அமைக்கப்படும்.
பொது விநியோகத் திட்ட பொருட்களை நகர்வு செய்யும் வாகனங்களை நிகழ்நேர கண்காணிப்பு செய்யப்படும் நடைமுறை ரூ.2 கோடியில் செயல்படுத்தப்படும்.
விவசாயக் கழிவு மறுசுழற்சி தொழில் செய்ய மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு கடன் வழங்கப்படும்.
150 நியாயவிலைக் கடைகளுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும் என்பன உள்ளிட்ட 39 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.