காத்மாண்டு:
நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுவரை 2,426 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அது கூறியுள்ளது.
நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி லாங்டாங் லிருங் பனிச்சிக ரத்தில் சுமார் 1.5 கி.மீ. அகலம் கொண்ட பனிமலை உடைந்து ஏரியில் விழுந்ததில், ஏரி உடைந்து சீனாவின் திபெத் பகுதி மற்றும் நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, நேபாளத்தின் போடேகோசி, திரிசூலி நதிகளில் பல மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரையோர கட்டிடங்கள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ள பாதிப்பு தொடர்பாக நேபாள உள்துறை அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 626 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
2,426 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இவர்களில், 517 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். மருத்துவமனைகளில் 101 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 15,224 பாதுகாப்புப் பணிாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதில், நேபாள காவல்துறையைச் சேர்ந்த 4,811 பேரும், நேபாள ராணுவத்தைச் சேர்ந்த 6,755 பேரும், நேபாள ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 3,658 பேரும் அடங்குவர்.
இதுவரை 4,451 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், 191 பேர் சுரங்கப்பாதையில் இருந்தும், 517 பேர் வான்வழியாகவும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் ராணுவம் மற்றும் தனியாருக்குச் சொந்தமான 16 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தகவல் தொடர்பு கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.
198 தொலைபேசி கோபுரங்கள் சேதமடைந்த நிலையில், அவற்றில் 145 பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
தற்போது அவை செயல்பாட்டில் உள்ளன.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால் சீனாவின் திபெத் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 554 பேரை காணவில்லை என்றும் திபெத் அவசரகால மேலாண்மை துறை அறிவித்துள்ளது.
காணாமல் போனவர்களில் 260 பேர் வெளிநாட்டினர் என்று தெரிவித்துள்ள திபெத் அவசரகால மேலாண்மை துறை, அதேநேரத்தில் அவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.
கியிரோங் மாவட்டத்தில் இருந்து 555 சுற்றுலாப் பயணிகளும், 499 உள்ளூர்வாசிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிதி திரட்டும் நேபாளம்:
வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய நேபாள அரசு நிதி திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நேபாளத்தின் பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு நேற்று வரை ரூ.229.5 கோடிக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளது.
நேபாள பிரதமரும் அமைச்சர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
அந்நாட்டின் தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரும் நிவாரண நிதி அளித்துள்ளனர்.