கோத்ரா விவகாரம் தொடர்பாக தவறான தரவுகளை பதிவிட்ட ஆதவ் அர்ஜுனாவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டிக்க வேண்டும்!! தமிழக பாஜக…

சென்னை:
‘கோத்ரா விவகாரம் தொடர்பாக தவறான தரவுகளை பதிவிட்ட ஆதவ் அர்ஜுனாவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டிக்க வேண்டும்.

மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தவறான பேச்சுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக அமைச்சர் களின் முறையற்ற, முதிர்ச்சியற்ற, சிறு பிள்ளைத்தனமான பேச்சுகள், அறிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இது நாள் வரை நாம் பொறுமையாக தாங்கிக் கொண்டிருந்ததற்கு காரணம், போனால் போகிறது, இப்போதுதானே அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் என்பதனால்தான்.

ஆனால், நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எந்த சம்பந்தமு மில்லாமல் கோத்ரா கலவரம் குறித்து பேசி, “கோத்ரா கலவரம் நடக்கும்போது இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டபோது என்ன குரல் கொடுத்தீர்கள் நீங்க?

இஸ்லாமியர்கள் உயிர்தான் முக்கியம் என்று சொல்லி ஏன் ராஜினாமா செய்யவில்லை என்றும், இந்த பாவத்தை, வரலாற் றை மறைக்க முடியாது” என திமுகவை விமர்சிக்கிறார்.

அவர் திமுகவை விமர்சிப்பது குறித்து நமக்கு கவலையில்லை. ஆனால், உண்மைக்கு புறம்பாக, வரலாற்றை திரித்து பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கோத்ராவில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி அன்று சபர்மதி விரைவு வண்டியில் S-6 பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களில் 59 பேரை உயிரோடு தீ வைத்து கொளுத்தி கொன்றது இஸ்லாமியர்கள்தான். அந்த 59 பேரும் இந்துக்கள்தான்.

இதில், அயோத்திக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த வர்களில் 27 பெண்கள், 10 குழந்தைகளும் அடங்குவர்.

அந்த வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 33 பேரும் இஸ்லாமியர்கள்தான் என்பதுதான் வரலாறு.

மேலும், அந்த படுகொலை சம்பவம் எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பதை நீதிமன்றம் தெளிவாக சொல்கிறது.

‘பெரும் கும்பல் ஒன்று ரயிலின் கற்கள் மற்றும் ஆயுதங்களை வீசியது.

ரயில் நிறுத்தப்பட்டு S-6 பெட்டியில் இருந்தவர்கள் தப்பித்து செல்லாதவாறு தடுக்கப்பட்டனர்.

ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட ஏறக்குறைய 140 லிட்டர் பெட்ரோல் S-6 ரயில் பெட்டியின் மீது வீசப்பட்டு கொளுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் நடைபெற்ற முதல் நாள் இரவு அமான் கெஸ்ட் ஹவுசில் சதித்திட்டம் தீட்டப்பட்டது.

இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாலேயே செய்யப்பட்டது’ என நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதை ஆதவ் அர்ஜுனா உணர வேண்டும். வரலாறு தெரியாமல் உளறிக்கொட்டுவது தவெக-வின் வழக்கமாகி விட்டபோதிலும், அமைச்சரான பின்னர் பொறுப்போடு பேசுவதுதான் அழகு.

கோத்ரா விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மத ரீதியாக பதற்றத்தை உண்டு செய்து, சிறுபான்மை யினரை தாஜா செய்ய வேண்டும் என்பதற்காக இந்துக்களுக்கு எதிராக பேசியதற்கு ஆதவ் அர்ஜுனா மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும்.

இனியாவது முதல்வர் விஜய் தன் அமைச்சர்களை விவரத்தோடு, பொறுப்போடு, உரிய தரவுகளோடு பேச வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

மேலும், தவறான தரவுகளை பதிவிட்ட ஆதவ் அர்ஜுனாவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டிப்பதோடு அவரின் தவறான பேச்சுக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *