லட்சக்கணக்கில் நன்கொடை மற்றும் ஆயிரக்கணக்கில் மாத பாராமரிப்புத் தொகையை பெற்றுக்கொண்டு முதியோர்களை கவனிக்காத ஆசிரமம்!!

புதுடெல்லி:
லட்சக்கணக்கில் நன்கொடை மற்றும் ஆயிரக்கணக்கில் மாத பாராமரிப்புத் தொகையை பெற்றுக்கொண்டு முதியோர்களை கவனிக்காத ஆசிரமத்தில் இருந்து 39 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

உத்த பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 55-ல் உள்ளது ஆனந்த் நிகேதன் விரிதா ஆசிரமம். இங்கு வயதானவர்கள் தங்குவதற்காக முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது. அண்மையில் இந்த ஆசிரமம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி வைரலானது.

அதில், முதியோர்கள் அவர்களில் அறைகளில் வைத்து பூட்டப்பட்டும், அவர்களது கைகள் கட்டப்பட்டும், ஆடைகள் இன்றி இருக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, மாநில மகளிர் ஆணையம் மற்றும் நொய்டா காவல் துறை துரிதமாக செயல்பட்டு அந்த ஆசிரமத்தில் கடந்த வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தியது.

இதில், முதியோர்கள் முறையான பராமரிப்பின்றி தங்கவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த 39 முதியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.

இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மீனாட்ஷி பரலா கூறுகையில், “ தரைதளத்தில் தங்கியிருந்த அறைகள் பூட்டப்பட்டிருந்தன.

அவர்களின் உடைகளில் இருந்து சிறுநீர் கழிக்கப்பட்ட துர்நாற்றம் வீசியது. பெரும்பாலான முதியவர்கள் ஆடைகளின்றி காணப்பட்டனர்.

39 முதியவர்களை கவனித்துக் கொள்ள ஒரேயொரு உதவியாளர் மட்டுமே உள்ளார். அவரும் தற்போதுதான் 12-ம் வகுப்பு படித்துவிட்டு பணியில் சேர்ந்துள்ளார்.

முதல் கட்ட விசாரணையில் அந்த ஆசிரமம் முதியவர்களிடமிருந்து ரூ.2.5 லட்சத்தை நன்கொடையாக பெற்றுக்கொண்டதுடன், மாத பராமரிப்பு கட்டணமாக ரூ.6,000-ம் பெற்று வந்துள்ளனர்.

ஆனால், முதியோர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்துதரப்படவில்லை. இதுதொடர்பாக, ஆசிரமத்தின் நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *