சென்னை:
சட்டப்பேரவையில் நேற்று வேளாண்மை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மதுரை மேற்கு தொகுதி தவெக எம்எல்ஏ தங்கபாண்டி பேசும்போது, “எனது தொகுதியில் கழிவுநீர், குடிநீர் வசதிகள் இல்லை.
எங்கள் பணம் எங்கே போனது? மதுரை மாநகராட்சியில் சொத்துவரி மதிப்பீட்டில் ரூ.200 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது” என்றார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:
கே.என்.நேரு (திமுக): சொத்துவரி மதிப்பீடு முறைகேடு தொடர்பாக 5 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேயர் நீக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. உரிய நடவடிக்கை எங்கள் அரசு எடுத்துள்ளது. நடவடிக்கை எடுக்காவிட்டால்தான் குற்றம்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: மதுரை மாநகராட்சி ஊழலில் ஊறிப்போய் உள்ளது. ஊழல் தொகை ரூ.200 கோடி கைப்பற்றப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.
கே.என்.நேரு: ஆட்சியும், அதிகாரமும், காவல்துறையும் உங்களிடம் உள்ளது. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?
அமைச்சர் சிடிஆர். நிர்மல்குமார்: மின் இணைப்பை வணிகத்துக்கு பெற்றுக்கொண்டு, சொத்து வரியை குடியிருப்புக்கானதாக நிர்ணயிக்கப்பட்டதை ஒப்பிடும்போதுதான் இந்த ஊழல் வெளியில் வந்தது.
கடந்த 2 மாதங்களாக மதுரை மாநகராட்சி முழுவதும் சொத்துவரி மற்றும் மின் இணைப்பு மறுமதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
சென்னையிலும் சொத்துவரி மறுமதிப்பீடு செய்யப்பட்டது திசை திருப்பப்பட்டது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கே.என்.நேரு: உங்கள் ஆட்சியில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஓராண்டு கழித்து நாங்கள் உங்கள் குறைகளைச் சொல்ல நேரிடும்.
தங்கபாண்டி (தவெக): 30 ஆண்டு ஆட்சி செய்திருக்கிறோம், நீண்ட வரலாறு இருக்கிறது என்கிறீர்களே, ஆனால் மதுரையில் அடிப்படை வசதிகள்கூட இல்லை. சாக்கடை, குப்பை, குடிநீர் பிரச்சினைகள் இருக்கின்றன.
ஆதவ் அர்ஜுனா: தமிழகத்தில் குடத்துடன் தாய்மார்கள் குடிநீருக்காக லாரிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். குழாய் மூலம் குடிநீர் கொடுக்க முடியாத நிலை இருக்கிறது.
25 மாநகராட்சிகளும் உங்கள் (திமுக) கட்டுப்பாட்டில்தான் உள்ளது. முதல்வரின் துறையில் நிதி ஒதுக்கினாலும் அதை செயல்படுத்துமிடத்தில் மேயர்கள், மண்டலக்குழு தலைவர்கள், நகராட்சி தலைவர்கள்தான் உள்ளனர்.
தமிழகத்தில் அரசும், அதிகாரமும் மாறினாலும், உள்ளாட்சித் துறையில் இன்னும் அதிகாரம் மாறாததால்தான் எந்த பணியும் நடைபெறவில்லை. அடுத்த 7 மாதங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் நாங்கள்தான் வெல்வோம்.
உள்ளாட்சி தேர்தல் முடிந்தபிறகு, 25 மாநகராட்சிகளிலும் மேயர்கள் மாறும்போது எல்லா ஊழல் ஆதாரங்களும் வெளியில் வரும்.
கே.என்.நேரு: தமிழகத்தில் நாளொன்றுக்கு 2,500 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கிய நிலையில், புதிய திட்டங்கள் மூலமாக 4 ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
எங்கள் மேயர்கள் இருந்தாலும், மாநகராட்சிகள் ஸ்தம்பித்துபோய் உள்ளன. இதைக் கண்டித்து சென்னை மாநகராட்சி மன்றத்தில் கவுன்சிலர்கள் கருப்பு உடையுடன் பங்கேற்றுள்ளனர்.
கவுன்சிலரோ, மேயரோ அரசின் திட்டத்தை செயல்படுத்த தவறினால் ஆணையரே அத் திட்டத்தை செயல்படுத்த அதிகாரம் உள்ளது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.