”அமைச்சர்கள் வாய்ப்பிருந்தால் கோவைக்கு வரும் போது எனது தொகுதிக்கு வர வேண்டும்” – வானதி சீனிவாசன்..!

கோவை வஉசி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “சட்டப்பேரவையில் கோவை தொகுதிக்கு குரல் கொடுக்கும் போது, கோவைக்கு எண்ணற்ற திட்டங்கள் கொடுத்துள்ளதாக துறை சார்ந்த அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

அமைச்சர்கள் வாய்ப்பிருந்தால் கோவைக்கு வரும் போது எனது தொகுதிக்கு வர வேண்டும். சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் பேச முற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை. சட்டமன்றத்தில் நாங்கள் பேசிய வீடியோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுக்கிறார்கள். சட்டப்பேரவையில் ஜனநாயகமாக பேச விடுவதில்லை” என்றார்.

மேலும், “நல்ல தலைவர்கள் தமிழகத்திற்கு வர வேண்டும் என்று நடிகர் விஜய் சொன்னதில் எந்த மாற்று கருத்துமில்லை. படித்தவர்களைவிட மக்களுக்காக உணர்வுபூர்வமாக உழைக்க கூடியவர்கள் அரசியலில் தேவை. சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். ஆனால் அரசியல் தலைவராக சினிமா நடிகர்கள் மாறியதற்கு பிறகு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

மத்திய அரசு, காலசூழலுக்கு ஏற்றவாறு சட்டதிருத்திங்களில் திருத்தம் கொண்டு வந்திருந்தாலும், பெயரை பொறுத்தளவுக்கு இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழி தெரியாதவர்களுக்கு சில வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. இதை மத்திய தலைமையிடம் நாங்கள் தெரிவித்துள்ளோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “திராவிட மாடலில் ’கிக்’ தான் முக்கிய என்று அவர்கள் நினைக்கிறார்கள். நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். பரப்பரப்பாக பிரேக்கிங் செய்தி வரக்கூடிய பிரச்சனைக்கு மட்டும் கூடுதல் நிவாரணம் அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேல்படிப்பிற்கு செல்வதாக வெளியாகி யுள்ள தகவல் குறித்து கேட்டபோது “எனக்கும் அது குறித்து தெரியவில்லை. அவரிடம் இன்னும் அது பற்றி பேசவில்லை” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *