சென்னை:
ஜவுளித்துறைக்கு ஜவுளி பூங்கா இருப்பதுபோல், கதர் ஆடை பூங்கா அமைக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல், கதர், தொழிலாளர் நலன், சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
கைத்தறி நெசவாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
தவெக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, நெசவாளர் ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
கைத்தறி ஆடைகளுக்கு தனிநபர்கள் விலை நிர்ணயம் செய்ய முடியாது. அரசுதான் விலையை நிர்ணயிக்க வேண்டும். தறிகளுக்கு வழங்கப்படும் 1000 யூனிட் இலவச மின்சாரத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கைத்தறி தளவாடங்களுக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும்.
தன் வாழ்நாள் முழுவதும் கதர் ஆடைகளையே அணிந்து எல்லோருக்கு்ம் முன்மாதிரியாக திகழ்ந்தவர் விஜயகாந்த். ஜவுளித்துறைக்கு ஜவுளி பூங்கா இருப்பதுபோல், கதர் ஆடை பூங்கா அமைக்க வேண்டும்.
கதர் ஆடைகளை பிரபலப்படுத்த பேஷன் ஷோக்கள் நடத்த வேண்டும்.
இந்தியாவில் உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெறும் இடம் தூத்துக்குடிதான். அங்குள்ள உப்பளங்கள் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் புதிதாக செயல்படுத்தப்பட இருக்கும் கப்பல் கட்டும் திட்டத்தால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அவர்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா பேசினார்.