வணிகவரித் துறையில் 47.19 சதவீதம் கூடுதலாக வருவாய் – தமிழ்நாடு அரசு பெருமிதம்!

வணிகவரித் துறையில் சுமார் 47.19% கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் வணிக வரித்துறையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான செயல்திறன்மிக்க ஆட்சியில், வணிகவரித் துறையின் வாயிலாக பல்வேறு சீரமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.

குறிப்பாக, வரி விதிப்பில் எளிய நடைமுறை, துறையில் நிர்வாக சீர்திருத்தங்களுடன் கூடிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அறிவியல் பூர்வமான பல தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மின்னாளுமைத் திட்டம், வணிகர்கள் பயன்பெறும் வகையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சமாதான் திட்டம், வருவாய் இழப்புகளைக் கண்டறிந்து, வருவாய் வளர்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், எனது விலைப்பட்டி எனது உரிமை, கட்டணமில்லா சேவை மையம், புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வணிக நட்புச் சூழலை உருவாக்கிட எளிய வணிகப்பிரிவு உருவாக்கம், வணிகர் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல, நல்லபல திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளதன் பயனாக, வணிகவரித் 47.19 சதவீதம் கூடுதலாக அதிக நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த வருவாயின் மூலம் தமிழ்நாட்டின் ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில், இந்தியாவில் இதுவரையில் எந்த மாநில அரசுகளும் முன்னெடுக்காத வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அருந்தவப் புதல்வர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் உதித்த திட்டங்களான விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட பல சிறப்பு வாய்ந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு, ஏழை எளிய மக்களின் ஏகோபித்த நல் ஆதரவுடன் முன்னணி மாநிலமாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சிறு அளவில் வணிகத்தில் ஈடுபடும் வணிகர்களின் நலனைப் பாதுகாத்திடும் பொருட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பிலிருந்த 1989 ஆம் ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக, வணிகர் நல வாரியத்தினை உருவாக்கிச் சாதனை படைத்தார். ஏறத்தாழ 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த வாரியத்தின் வாயிலாக, பல்வேறு நலத்திட்டங்களான குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, விளையாட்டு வீரர்களுக்கான உதவி, சிறு கடைகள் அமைத்திட நிதியுதவி, திருமண உதவி மற்றும் விபத்துக்கால உதவி என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வரி நிர்வாகத்தில் எளிய நடைமுறையின் பயனாக கூடுதலாக ரூ.40,399.51 கோடி ரூபாய் வருவாய் வசூல் செய்யப்பட்டு சாதனை

வரி நிர்வாகத்தில் பல்வேறு எளிய நடைமுறைகளும், மின்னாளுமைத் திட்டத்தின் வாயிலாக வலைத்தளங்களின் மூலமாக வரிகளை செலுத்துவதில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை தொடர்ந்து செயல் படுத்தியதின் பயனாக, முந்தைய ஆட்சியில் (2020-21) ரூ.85,606.41 கோடி ரூபாய் ஆக இருந்த மொத்த வரி வசூல் வருவாயானது நடப்பாண்டில் (2023-2024) 1,26,005.92 கோடி ரூபாய் ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் 40,399.51 கோடி ரூபாய் அதிகமாக ஈட்டப்பட்டு 47.19 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

வணிகர்கள் பயன்பெறுகின்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமாதான திட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி முந்தைய சட்டங்களின் வரி நிலுவைகளை வசூலிக்கும் பொருட்டு, வணிகர்கள் பயனடையும் வகையில் சமாதான திட்டம் 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு வரிகள் (நிலுவைகளை தீர்வு செய்தல்) சட்டம் (சட்ட எண் 24/2023) இயற்றப்பட்டு 16.10.2023 முதல் 31.03.2024 வரை நடைமுறையில் இருந்தது. இத்திட்டத்தின் கீழ், ரூ.50,000 வரை நிலுவைத் தொகை உள்ள 1,15,805 இனங்களில் மொத்தக் கேட்புத் தொகையான ரூ. 142.56 கோடியை தள்ளுபடி செய்து ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், ரூ.50,000-க்கு மேல் நிலுவைத் தொகை இருந்த இனங்களில், ரூ.247.89 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய சமாதான திட்டங்களுடன் ஒப்பிடும் போது இதுவரை வசூலானதில் அதிகபட்ச தொகையாகும்.

கட்டணம் இன்றி வருடாந்திர வரி விவர அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 10.01.2024 வரை நீட்டிக்கப்பட்டது.

  • புயல் மற்றும் வெள்ளம் பாதித்த மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் உள்ள வணிகர்களுக்கு, தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரிச் சட்டம், 2006-இன்படி 2022-2023-ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை WW படிவத்தில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 31.01.2024 வரை நீட்டிக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றிட முனைப்புடனும், அர்ப்பணிப்புடனும் ஆற்றி வரும் பணி அளவிடற்கரியது. அந்த வகையில், வணிக வரித்துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு புதிய திட்டங்களின் மூலம் இனிவரும் காலங்களில் அரசுக்கு கூடுதலாக கிடைக்கும் வருவாயினை உறுதி செய்யும்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *