புதுச்சேரி:
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக தவெக அறிவித்துள்ளது.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த், திமுக சார்பில் சேது செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சலீம், நாம் தமிழர் கட்சி கார்த்திக் குமாரி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் தவெக கூட்டணியில் போட்டியிட்ட நேயம் மக்கள் கழகம் இந்த முறையும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்தது. அதையடுத்து தவெகவிடம் ஆதரவு கோரியிருந்தது.
இச்சூழலில் காங்கிரஸுடன் நடந்த பேச்சுவார்த்தை முடிவில் நேயம் மக்கள் கழகம் வேட்பாளர் விநாயகம் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருக்கிறார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளராக அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இச்சூழலில் தமிழகத்தில் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது, தட்டாஞ் சாவடி இடைத்தேர்தலில் ஆதரவு தர தவெகவிடம் கோரியி ருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
இதையடுத்து தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாள ருக்கு தவெக ஆதரவு அளிக்க வேண்டிய நிலை உருவானது.
இதனிடையே, புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தி யலிங்கம் தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்கள் நேரு, கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் வைத்திய நாதன், அனந்தராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பொதுச்செயலர் ஆனந்தை இன்று சந்தித்தனர். முறைப்படி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கோரி கடிதம் அளித்தனர்.
இதையடுத்து அங்கு வந்திருந்த புதுச்சேரி தவெக நிர்வாகிகள் எம்எல்ஏ ராமு, முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் மற்றும் மாநில, தட்டாஞ்சாவடி தொகுதி நிர்வாகிகள் அமைச்சர் ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பின் நிகர்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சர் ஆனந்த், “தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை தவெக ஆதரிக்கிறது.
கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று அறிவித்தார்.
காங்கிரஸ் வேட்பாளராக விநாயகம் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளார்.
காங்கிரஸ் தலைமை அறிவித்தவுடன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார் எனக் கூறப்படுகிறது.