சாத்தனூர் அணையில் வெள்ளம் வராமல் தடுக்க சிறப்புத் திட்டம் மேற்கொள்ளப்படவிருப்பதாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் 2ம் நாளாக இன்று தொடங்கின. 2025 – 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெற உள்ளது. முன்னதாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதன்பின் பெஞ்சல் புயல் மழையால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
இதனை தடுக்க தடுப்பணை கட்டப்படுமா ? என சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், சாத்தனூர் அணையில் பெறு வெள்ளம் வந்தால் சமாளிக்க சிறப்பு திட்டம் போடப்பட்டுள்ளது. உறுப்பினர் கோரிக்கை நிரைவேற்றப்படும் என்றார். மேலும் சாத்தனூர் அணையில் வெள்ளம் வராமல் தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்தார்.
தொடர்ந்து கீழ்வேளூர் தொகுதியில், வேட்டைக்காரனிருப்பு பகுதியில் குழந்தைகள் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என நாகை மாலி கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், “இந்தாண்டு 500 குழந்தைகள் மையங்களுக்கு கட்டிடம் கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
குழந்தை நல மையங்களை சீர்மிகு மையங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு, அனுமதி அளிக்கப்பட்ட 1,503 மையங்களில் 1,203 மையங்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது”