இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி யில் இங்கிலாந்து அணி 223 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 223 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் டாம் பேன்டன் 105 பந்துகளில் 126 ரன்கள் விளாசி, தனது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரை பதிவு செய்தார். அவரது அதிரடி ஆட்டத்தில் 21 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கின.

கேப்டன் ஹாரி புரூக் 66 பந்துகளில் 77 ரன்களும், சிறப்பாக விளையாடி வரும் ஜோர்டான் காக்ஸ் 52 பந்துகளில் 76 ரன்களும் எடுத்தனர்.

புரூக்-பான்டன் இணைந்து 150 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்தின் மிகப்பெரிய ஸ்கோருக்கு அடித்தளமாக அமைந்தது. புரூக் ஆட்டமிழந்த பின்னரும் காக்ஸ் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.

பேன்டன் தனது 126 ரன்கள் ஆட்டத்தில் 6-வது சிக்ஸரை அடிக்க முயன்றபோது லாங்-ஆன் திசையில் மலிங்காவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வில் ஜாக்ஸ் 21 பந்துகளில் 25 ரன்களும், காக்ஸ் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதால் இங்கிலாந்தின் ஸ்கோர் உயர்ந்தது.

இலங்கை அணியின் தில்ஹாரா பெர்னாண்டோ 52 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் இன்னிங்ஸின் கடைசி 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

356 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

இன்னிங்ஸின் 8-வது பந்திலேயே பதும் நிசங்கா 1 ரன்னில் சன்னி பேக்கரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது பேக்கரின் முதல் ஒருநாள் போட்டி விக்கெட்டாகும்.

அதன்பின்னர் இலங்கை அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. கேப்டன் குசல் மெண்டிஸ் 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தாலும், மற்ற பேட்டர்கள் நிலைத்து நிற்கவில்லை.

36 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில் இருந்த இலங்கை, அடுத்த 10 ஓவர்களில் 82 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

பவன் ரத்நாயக்க 18 ரன்களில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. காக்ஸ் பந்தை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்பே ஸ்டம்பில் இருந்த பெயில்ஸை அகற்றினார்.

இதையடுத்து நடுவர்கள் மற்றும் வீரர்கள் இடையே சுமார் 5 நிமிடங்கள் ஆலோசனை நடைபெற்றது. பின்னர் ஆர்ச்சர் வீசிய நேரடி த்ரோ ஸ்டம்ப்பைத் தாக்கியதால் ரத்னநாயக்கவின் ரன்-அவுட் செல்லுபடியாகும் என நடுவர்கள் அறிவித்தனர்.

அதன்பின் சரித் அசலங்கா மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோரும் அடுத்த 8 பந்துகளுக்குள் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 82 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இங்கிலாந்தின் லியாம் டாசன் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குறிப்பாக டாசன், இலங்கையின் கடைசி 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இலங்கை அணி 21.5 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் 29.1 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 223 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

சொந்த மண்ணில் நடைபெற்ற கோடைகால கிரிக்கெட் தொடரையும் இங்கிலாந்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

டாம் பேன்டன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட, வில் ஜாக்ஸ் தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *