மதுரை:
“முதல்வர் விஜய் எங்கள் குழந்தைகளுக்கு தாய்மாமன்” என்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விழாவில் முதல்வர் கையால் மோதிரம் அணிவிக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் பூரிப்பு அடைந்தனர்.
முதல்வர் விஜய் முதலாவது மோதிரம் அணிவித்த குழந்தை முத்து யாழினியின் தாய் அர்ச்சனா தேவி கூறுகையில், “எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை.
எனக்கு அண்ணனாக, என் குழந்தைக்கு தாய்மாமனாக இருந்து முதல்வர் விஜய் இந்த மோதிரத்தை அணிவித்தது வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது.
முதல்வர் அருகில் வந்து என் குழந்தையின் கையில் மோதிரத்தை அணிவித்தபோது என்னையும் மீறி மகிழ்ச்சியின் மிகுதியால் கண்ணீர் வந்துவிட்டது.
முதல்வருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அடுத்ததாக ஆண் குழந்தை முகமது சயின்ஷாவின் தாய் ரமிலா பானு கூறுகையில், “நாங்களெல்லாம் சாதாரண கவுன்சிலர்களை கூட நேரில் பார்க்க முடியாமல் தவித்தோம். ஆனால், முதல்வர் விஜயின் கையால் எனது குழந்தைக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை.
மிக அன்போடு, அரவணைப்போடு ஒரு முதல்வராக அல்லாமல் சொந்த அண்ணன் போல் மோதிரம் அணிவித்த நிகழ்வு நெகிழ்ச்சியாக இருந்தது. இது என் குழந்தைக்கு கிடைத்த வரம்” என்றார்.
குழந்தைக்கு தங்க மோதிரம் பெற்ற ஸ்டெல்லா மேரி கூறுகையில், “இந்த திட்டம் நடக்கவே நடக்காது என்று சிலர் கூறினார்கள்.
ஆனால், இத்திட்டத்தில் முதல்வரே எனது குழந்தைக்கு மோதிரம் அணிவிக்க எங்கள் பெயர் தேர்வு செய்யப்பட்டதும் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.
நான் கேட்டுக் கொண்டதிற்கினங்க எனது குழந்தைக்கு முதல்வரே பெயரிட்டார்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.