கணக்கீட்டுப் பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழ்நாடு மின்சார வாரியம் கைவிட வேண்டும்; திருமாவளவன் எதிர்ப்பு!!

சென்னை:
‘கணக்கீட்டுப் பணியை தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழ்நாடு மின்சார வாரியம் கைவிட வேண்டும்.

காலிப் பணியிடங்களை உள்முகத் தேர்வில் தேர்ச்சிபெற்றோரைக் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும்’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் சுமார் 3.52 கோடி மின் நுகர்வோர் உள்ள நிலையில், பல இடங்களில் மின்சாரம் வழங்கலில் தடை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையே நிலவுகிறது.

இதனால் அரசின் மீது களங்கத்தைக் கற்பிக்கும் சூழல் எழுகிறது.

மின் தேவை அதிகரிப்பு, மின்நுகர்வோருக்கு சீராக மின்சாரம் வழங்க இயலாமை, மின் கணக்கீட்டில் தாமதம், கட்டணக் கணக்கீட்டில் குளறுபடி, மின் கட்டண உயர்வு போன்ற புகார்களும் நிகழ்காலத்தில் அதிகரித்துள்ளன.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள பணியாளர் பிரச்சினைகள்தான் இத்தகைய நெருக்கடிநிலை ஏற்பட முக்கியக் காரணமாகும்.

சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பீடர் டிரிப் ஆகி, துணைமின் நிலையங்களில் ஆப்ரேட்டர்கள் இல்லையென் பதால் மின் தடை ஏற்படுகிற இருள்நிலை உருவாகிறது.

மின் நுகர்வோருக்கு கட்டணக் கணக்கீடு தவறுகளால் கணக்கீடு மற்றும் மின் கட்டண உயர்வு போன்ற புகார்கள் பெருமளவு எழுகிறது.

மின் கணக்கீட்டைச் செய்திட கட்டணக் கணக்கீட்டாளர் பற்றாக்குறையே இதற்குக் காரணம்.

த.வெ.க அரசு பொறுப்பேற்றதும் வெளியிடப்பட்ட மின்துறை வெள்ளை அறிக்கையின்படி, 53,575 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அவற்றில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதில் மிகப் பெரும்பான்மையாக கணக்கீட்டாளர் பணியும் சேர்த்து செய்யக்கூடிய பல்நோக்கு கள உதவியாளர்கள் 12,500 பேரும், அதற்கடுத்து மின் தொழில்நுட்ப உதவியாளர்கள் 945 பேரும் பணியமர்த்தப்படுவார்கள் என வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

கணக்கீட்டாளர் பணிக்கு ஆட்கள் பணியமர்த்துவதற்கு மாறாக, கணக்கீட்டுப் பணியினைச் செய்யும் பொறுப்பு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில்; அதுவும் வரையறுக்கப்பட்ட சிலர் மட்டுமே பங்குபெறக்கூடிய லிமிடெட் டெண்டர் முறையில், மின் கோட்ட அளவில் செயற் பொறியா ளர்களே ஒப்பந்த அழைப்பு விடுத்து அக்டோபர் முதல் 6 மாத காலத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை மின்துறை போன்ற சார் நிறுவனங்களை் முழுமையாக தனியார்மயமாக்கும் நிர்வாக முயற்சியாகவே அமையும்.

எனவே, கணக்கீட்டுப் பணியினை தனியார்வசம் ஒப்படைக் கும் முடிவைக் கைவிட வேண்டும்.

மின் வழங்கலில் தடை ஏற்படுவதற்கு துணைமின் நிலைய ‘பீடர் டிரிப்’ ஆகும் நேரத்தில் அவற்றைச் சரி செய்ய போதுமான ‘ஆப்ரேட்டர்கள்’ இல்லையென்பதாகும்.

இதனைச் சீரமைக்கும் பொறுப்பு துணைமின் நிலைய ஆப்ரேட்டர் நிலையிலுள்ள தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் இரண்டாம் நிலை இளநிலைப் பொறியாளர்கள் பணியாகும். இவர்கள் பணியில் இல்லை எனும்போது இத்தகைய நேர்வுக ளில் போதுமான திறனும் பயிற்சியும் இல்லாத களப் பணி யாளர்களைக் கொண்டு சீரமைப்புப் பணிகளை மேற் கொள்வதால், அவை முழுதிறனின்றி, காலதாமதத்தில் நடைபெறுகிறது.

தற்போது சுமார் 1800 ஆப்ரேட்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதோடு, 250 இரண்டாம் நிலை இளநிலைப் பொறியா ளர்கள் பதவி உயர்விற்காகக் காத்து இருக்கிறார்கள்.

புதிதாக நிறுவப்பட உள்ள துணை மின் நிலையங்களின் எண்ணிக்கையில் 50% த்திற்கு புதிய பதவி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துயும் கணக்கில் கொண்டால் காலிப் பணியிடங்கள் சுமார் 2,500 ஆக உயரும். இந்த ஆண்டிற்குள் 945 காலியிடங்கள் நிரப்பப்படும் என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியினை மேற்கொள்ள போதுமான பயிற்சியும் முழுத்திறனும் பெற்ற, பதினோர்க்கல்வி மூலம் டிப்ளமோ படித்து மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக வேறு கீழ்நிலைப் பணிகளில் பணியாற்றிடும் தொழில் நுட்ப உதவியாளர் பதவிக்கு உள்முகத்தேர்வு – தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மீதம் சுமார் 600 பேர் காத்துக் கிடக்கின்றனர்.

அரசு நிரப்ப உள்ள 945 இடங்களில் முதலில் இவர்களைக் கொண்டு இந்த இடங்களை நிரப்புவதன் மூலம் தேங்கிக் கிடக்கும் தொடர்புடைய பணிகள் உடனடியாக நடைபெறும்.

தற்போது நிலவும் நடைமுறைச் சிக்கல்களை இவர்கள் பெற்றுள்ள பணி அனுபவத்தால் மிக எளிதாகவும் ஆளுமைத்திறனோடும் கையாள்வார்கள் என்ற நம்பிக்கையை அரசு உணர்ந்து பணியமர்த்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு மின்துறையில் நிரப்ப முடிவு செய்துள்ள 945 ஆப்ரேட்டர் பணியிடங்களில் உள்முகத்தேர்வில் தேர்வு பெற்று காத்திருப்பவர்கள் அனைவரையும் முதலில் பணியமர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *