தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் ‘ரோடுஷோ’ – வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தீவிர பிரசாரம்…

தாராபுரம்
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் பிரசாரம் வருகிற 4 -ந் தேதியுடன் முடிவடைகிறது.

தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் த.வெ.க .வேட்பாளர் சத்தியபாமா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் ஆகிய 5 பேர் இடையே தான் போட்டி நிலவுகிறது. இருந்தாலும் த.வெ.க, தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதைத் தொடர்ந்து தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக த.வெ.க. கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அமைச்சர்கள், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர ஓட்டு வேட்டையாடியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்த அவர் அங்கிருந்து கார் மூலம் தாராபுரம் வந்து தி.மு.க. நிர்வாகியின் வீட்டில் இரவு தங்கியிருந்தார்.

அங்கு முன்னாள் அமைச்சர் சாமிநாதன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். இதைதொடர்ந்து இன்று காலை அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தாராபுரம் அமராவதி சிலையில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ரோடு ஷோ’ வை தொடங்கினார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக உதய சூரியன் சின்னத்தில் அவர் வாக்கு சேகரித்தார்.

வழிநெடுகிலும் தொண்டர்கள் கட்சிகொடிகளை பிடித்தபடியும் மேளதாளங்கள் முழங்கவும் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.


தொடர்ந்து, பொள்ளாச்சி சாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பிரசாரம் செய்கிறார்.

இதைத் தொடர்ந்து தாராபுரத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு உடுமலை சாலை மல்லி ரிசாட் அருகில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதற்காக 25 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு 25000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன.

இங்கு கட்சி கொடி தோரணங்கள் கட்டப்பட்டு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *