மீண்டும் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் இந்தியா மேலும் பல்வேறு வளர்ச்சிகளை அடையும் – ஜே.பி.நட்டா..!

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தியாயினிக்கு வாக்கு சேகரித்து அரியலூர் அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசியதாவது,

எழுச்சியுடன் வந்துள்ள இந்த கூட்டத்தை பார்க்கையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் கார்த்தியாயினி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. நாயன்மார்கள், சித்தர்கள் வாழ்ந்த இந்த பகுதிக்கு வந்துள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன். இப்பகுதி மக்கள் கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர். இதனை தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் அழிக்கத் துடிக்கின்றன.

மோடி ஆட்சிக்கு வந்த பின் கொரோனாவை கையாண்டதில் பொருளாதாரத்தில் 13- வது இடத்திலிருந்து 5 வது இடத்துக்கு வந்துள்ளோம். கார்த்தியாயினியை வெற்றி பெற வைத்தால் மோடி அவர்களை 3 முறையாக பிரதமராக அமர்த்தலாம்.

சீனாவிடம் இருந்து செல்போன்கள் வாங்கிய காலம் மாறி, தற்போது இந்தியாவிலேயே அதிகப்படியான செல்போன்கள் தயாரிக்கப்படுவதை நாம் அறிவோம். அதே போல் வாகன உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இதற்கு முன்பு மருந்துகள் வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலேயே அனைத்து மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

அந்த அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது. இதற்கு முழு காரணமாக மோடி இருந்துள்ளார். மீண்டும் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் இந்தியா மேலும் பல்வேறு வளர்ச்சிகளை அடையும்.

பெண்களுக்கு அதிகாரம் தருவது, படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, விவசாயிகள் வளர்ச்சி, பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள் வளர்ச்சி என அனைவருக்குமாக மோடி ஆட்சி செய்து வருகிறார்.

இந்தியாவில் பிரதமரின் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 55 கோடி மக்கள் பயன் பெறுகின்றனர். மாதம் 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி, கோதுமை ஆகியவற்றை மத்திய அரசு வழங்கி வருகிறது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 30 லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 40 லட்சம் பேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, 14 லட்சம் வீடுகள் கட்டப்படுள்ளன. 80 லட்சம் வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு அதிகப்படியான பாசம் உள்ளது. தமிழகத்துக்கு வழங்கப்படும் நிதி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கிராமபுற சாலை வசதி மேம்படுத்துதல், கிராமபுற வளர்ச்சி என அனைத்துக்கும் அதிகப்படியான நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலை திட்டத்துக்கும் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. கோவை, ஒசூர், சேலம், திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் ரூ.12 ஆயிரம் கோடியில் பாதுகாப்பு தளவாட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சென்னை, பெங்களூர் தொழிற்சாலை காரிடர் நகரங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஊழல் இல்லாத ஆட்சியை மோடி வழங்கி வருகிறார். ஆனால் இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் குடும்பக் கட்சிகள். வாரிசு அரசியல், தமிழகம் முழுவதும் கொள்ளை அடிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது என்பது தான் தி.மு.க.வின் கொள்கை.

குடும்ப ஆட்சி நடத்துவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததுதான் இண்டியா கூட்டணி. அந்த கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஒன்று ஜெயிலில் உள்ளனர் அல்லது பெயிலில் உள்ளனர் என்று பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *