அரையிறுதியில் இலங்கையை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி!!

நிஷின்:
நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் கிரிக்கெட்டில் அரையிறுதி ஆட்டத்தில் இலங்கையை 124 ரன்களில் வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி.

டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின.

ஜப்பானில் உள்ள நிஷினில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது.

இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். அபிஷேக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களத்துக்கு வந்த சஞ்சு சாம்சனும் 7 ரன்களில் வெளியேறினார். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இப்படி இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்த போதும் இஷான் கிஷன் சிறப்பாக ஆடி 46 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அக்சர் 8, திலக் வர்மா 2, ஷிவம் துபே 3, வாஷிங்டன் சுந்தர் 7 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது இந்தியா.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது. அந்த அணி 9.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆறு வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். எஞ்சிய வீரர்களில் ஒருவர் மட்டுமே 15 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் பும்ரா, அக்சர், அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இலங்கையின் மூன்று வீரர்கள் ரன் அவுட்டாகி வெளியேறினர். இதன் மூலம் இந்தியா இந்த ஆட்டத்தில் 124 ரன்களில் வெற்றி பெற்றது.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது பாகிஸ்தான். அதன் மூலம் வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன.

இறுதிப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் இரண்டு அணிகளும் வெற்றிப் பதக்கத்தை பகிர்ந்து கொள்ளும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *