புதுடெல்லி:
ஜந்தர் மந்தரின் போராட்டத்தின்போது டெல்லி காவல் துறையின் கூடுதல் துணை ஆணையரான (ஏடிசிபி) ஐஸ்வர்யா சிங் நடவடிக்கைகள் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி உள்ளன.
மத்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறையின் ஒரு பெண் அதிகாரி எடுக்கும் நடவடிக்கையும் தற்போது வைரலாகி உள்ளது. அந்த பெண் அதிகாரி, டெல்லி காவல் துறையின் தெற்குப் பகுதி ஏடிசிபி ஐஸ்வர்யா சிங்.
இவரது அதிரடி நடவடிக்கை தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி உள்ளன.
ஏடிசிபியான ஐஸ்வர்யா, காவலர்களைப் போல் களத்தில் இறங்கிதன் கடமையை ஆற்றுவது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அவரது துணிச்சலான செயல்பாடுகள் அடங்கிய காணொளிகள் வைரலாகி வருகின்றன.
அவற்றில், போராட்டக்காரர்களைப் பிடித்து பேருந்துகளில் ஏற்றுவது, போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடிய போராட்டக்காரரைப் பிடிப்பது, காயமடைந்த ஒருவருக்கு உதவுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதைக் காண்பவர்கள் ஏடிசிபி ஐஸ்வர்யாவை பாராட்டி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் அலிகர் நகரைச் சேர்ந்த ஐஸ்வர்யா சிங், கடந்த 2022-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 97-வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார்.
இவரது தந்தை ஞானேந்திர பிரதாப் சிங், அசாம்-மேகாலயா பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி.