அம்ரோஹா தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு!!

உத்தர பிரதேச மாநிலம், அம்ரோஹா தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-

“காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சிகளும் நாட்டுக்கு துரோகம் செய்த கட்சிகளாகும். அந்தக் கூட்டணியினர் மீண்டும் ஒருமுறை தங்கள் தவறான தேர்தல் வாக்குறுதியின் மூலம் உங்களிடம் வாக்கு கோரி வருகின்றனர்.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஷரியத் சட்டத்தை அமல்படுத்துவோம்’ என்று கூறியுள்ளனர். இந்த தேசம் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தின்படி நடைபெற வேண்டுமா அல்லது ஷரியத் சட்டத்தின்படி நடைபெற வேண்டுமா என்பதை நீங்களே கூறுங்கள்.

காங்கிரஸ் கட்சியினர் தனிநபர் சட்டத்தைக் கொண்டுவருவோம் என்று தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். இதற்கு காரணம் பிரதமர் மோடி முத்தலாக் முறையை ஒழித்தார் என்பதற்காக ஷரியத் சட்டத்தைக் கொண்டுவருவோம் என்று கூறுகின்றனர்.

தனிநபர் சட்டத்தை மாற்றியமைப்போம் என்று அவர்கள் கூறியிருப்பதன் மூலம் ஷரியத் சட்டத்தைக் கொண்டு வருவார்கள். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின்படி அவர்கள் மக்களின் உடைமைகளைப் பறித்து மற்றவர்களுக்கு வழங்குவோம் என்று கூறுகின்றனர். காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உங்கள் உடைமைகளைக் கொள்ளையடிக்க நீங்கள் அனுமதிப்பீர்களா?

இந்த வெட்கமற்ற மனிதர்கள், ஒருபுறம் உங்கள் சொத்துகளை நோட்டமிடும் அதே வேளையில், மறுபுறம் மாபியாக்களையும் கிரிமினல்களையும் வளர்த்து விடுகின்றனர்.

இதற்கு முன் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நாட்டு வளங்களில் முஸ்லிம்களுக்குதான் முதல் உரிமை என்று கூறினார். அப்படியானால் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள், விவசாயிகள் எங்கே செல்வார்கள்? தாய்மார்களும், சகோதரிகளும், இளைஞர்களும் எங்கே செல்வார்கள்?

பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் பயங்கரவாதமும் அச்சுறுத்தலும் நிலவியது. மக்கள் பயத்தில் இருந்தனர். ஆனால், 2014-க்குப் பிறகு பயங்கரவாதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, 2019-இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை நீக்கியதன் மூலம் பயங்கரவாதத்தின் வேர் அழிக்கப்பட்டது. இன்று நாட்டில் பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது” என்றார்.

உத்தர பிரதேசத்தில் நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலில் அம்ரோஹா தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *