நான் நடித்து வரும் தனுஷ் படத்திற்குக்கூட நான் முறையாக ஆடிஷன் செய்த பிறகே தேர்ந்தெடுக் கப்பட்டேன் – ப்ரீத்தி முகுந்தன் !!

சென்னை:
நான் முன்னணி கதாநாயகி என்பதால், ஆடிஷன்களில் இருந்து சலுகை கிடைக்கும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்ப்பது இல்லை.

அந்த வரிசையில், அடுத்ததாக ‘லப்பர் பந்து’ திரைப்படப் புகழ் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில், நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளார்.


இந்நிலையில், தனது திரைப்பயணம், படத் தேர்வுகள் மற்றும் சினிமாவில் தனக்குக் கிடைக்கும் அனுபவங்கள் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு திரைப்படத்தில் கமிட்டாவது குறித்து ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், “இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்லும் விதம் மிகவும் முக்கியமானது.

அவர்கள் விவரிக்கும் விதம் நன்றாக இருந்தால், பாதி கதை சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே அந்தப் படத்தில் நான் நடிக்கலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானித்து விடுவேன்.

குறிப்பாக, கதாநாயகிகளுக்குக் கதையில் நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யும் போது, அது இயக்குநர் மீதும், அந்தப் படத்தின் மீதும் எனக்குப் பெரிய நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கிறது” என்று கூறினார்.

ஆரம்பக் காலத் தவறுகள் குறித்துப் பேசிய அவர், “சினிமாவின் ஆரம்பக் காலகட்டங்களில் சில கதைகளை நான் தவறாகக் கணித்துத் தேர்ந்தெடுத்தேன்.

ஆனால், அதன்பிறகு படிப்படியாக என் அனுபவத்தின் மூலமே எப்படிக் கதைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கற்றுக் கொண்டேன்.

இப்போது நான் ஒரு இயக்குநரைச் சந்திக்கச் செல்கிறேன் என்றால், அதற்கு முன்பாகவே அவருடைய முந்தைய படங்களைப் பார்த்து, அவருடைய இயக்கம் மற்றும் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிப்பேன்.

அதன்பின்னர், அதை அவர் சொல்லும் திரைக்கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்துதான் என் இறுதி முடிவை எடுப்பேன்” என்றார்.

“நான் இதுவரை 10 திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ஒரு படத்தின் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பேனா என்பதைக் கண்டறிய ஆடிஷன் செய்வது இப்போது சாதாரணமான ஒரு விஷயமாகிவிட்டது.


நான் ஒரு முன்னணி கதாநாயகி என்பதால், ஆடிஷன்களில் இருந்து எனக்கு விலக்கு அல்லது சலுகை கிடைக்கும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்ப்பது இல்லை. தற்போதைய சூழலில் சினிமா மிகவும் தொழில்முறை சார்ந்ததாக மாறிவிட்டது.

அதற்குச் சிறந்த உதாரணம், இப்போது நான் நடித்து வரும் தனுஷ் படத்திற்குக்கூட நான் முறையாக ஆடிஷன் செய்த பிறகே தேர்ந்தெடுக்கப்பட்டேன்” என்று ப்ரீத்தி முகுந்தன் மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.


அடுத்தடுத்து வெற்றிகளைத் குவித்து வரும் ப்ரீத்தி முகுந்தன், தனுஷ் படத்திலும் ஆடிஷன் மூலமே தேர்வாகியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அவரது அர்ப்பணிப்பைக் காட்டுவதாகப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *