சென்னை:
நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது வாழ்வில் 2 ஆண்டுகள் ‘நார்சிஸ்டிக்’ (ஒருவரை தன் கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்திருப்பது) துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டிருந்தேன் என சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் அந்த துன்புறுத்தல் காரணமாக, சினிமாவில் இருந்து விலக நினைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “அந்தக் கடுமையான காலகட்டத்தில் கண்ணாடியைப் பார்த்தால், அதில் என் முகத்தைப் பார்க்க முடியாது. வேறு ஏதோ ஒன்றைப் பார்ப்பது போல இருக்கும்.
ஒப்பனை செய்துகொண்டு என் முகத்தைப் பார்த்தாலும் அதில் நான் இல்லை.
ஒவ்வொரு நாளும் உயிர் பிழைத்திருப்பதற்கான போராட்டமாக உணர்ந்தேன். ஒவ்வொரு நாளும் அந்த நாளை எப்படியாவது கடந்து செல்வதுதான் ஒரே நோக்கமாக இருந்தது. ஒரு நாள் முடிந்ததும், ‘கடவுளே, இன்றைய நாளை எப்படியோ கடந்து வந்துவிட்டேன்’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவேன்.
மறுநாள் தூங்கச் செல்லும்போது, நாளை என்ன பயங்கரமான சம்பவம் நடக்கப் போகிறதோ என்ற அச்சம் மீண்டும் எழும். அப்போது, வாழ்க்கையை வாழ்வதே என்னை சோர்வடையச் செய்தது.
அந்தக் கடினமான காலகட்டத்தில் தொடர்ந்து படப்பிடிப்புகளுக்குச் சென்றாலும், மனதளவில் முழுமையான ஈடுபாட்டுடன் நடிக்க முடியவில்லை. அந்தக் காலக்கட்டத்தில் நான் நடித்த படங்களை இப்போது நடிக்க வேண்டியிருந்தால் 50 சதவிகிதம் இன்னும் சிறப்பாக நடித்திருப்பேன்.
அப்போதும் நடிப்பை நான் முழுமையாகக் கைவிடவில்லை. உண்மையில், அந்த முடிவை எடுக்கும் நிலைக்கு மிக அருகில் சென்றுவிட்டேன்.
அந்த முடிவை எடுக்காததற்காக என்னை நானே பாராட்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.