புதுடெல்லி:
இந்தியாவுக்கு எதிரான சக்தி களை தோற்கடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி துவாரகா பகுதி ஸ்ரீ ராம் லீலா சொசைட்டி சார்பில் நேற்று தசரா விழா நடைபெற்றது.
இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். அவர் கூறும்போது, “நாடு முழுவதும் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பல்வேறு நகரங்களில் ராம்லீலா அரங்கேற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம் பகவான் ராமரின் நல்லாட்சி, நற்குணம் மக்களுக்குப் போதிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கிழக்கு டெல்லியை சேர்ந்த ஸ்ரீ ராம்லீலா கமிட்டி சார்பில் டிடிஏ உத்சவ் மைதானத்தில் ஆண்டு தோறும் தசரா விழா நடத்தப்பட்டு வருகிறது.
அங்கு நேற்று நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: தசரா என்பது வெறும் விழா கிடையாது. இந்தியாவுக்கு ஊக்க சக்தி வழங்கும் நிகழ்ச்சி்.
தசராவை ஒட்டி நாடு முழுவதும் ராம்லீலா நாடகங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன்மூலம் பகவான் ராமரின் போதனைகள் மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்பதும், பொய்மையை, வாய்மை வெல்லும் என்பதும் ராம்லீலா மூலம் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது.
பகவான் ராமரின் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் எழுந்தன. ஆனால் அவர் ஒருபோதும் நீதியின் பாதையில் இருந்து தவறவில்லை.
பகவான் ராமர் காட்டிய வழியில் மத்திய அரசு ஆட்சி நடத்தி வருகிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க ராமர் ஊக்க சக்தியாக இருப்பார்.
இன்றைய சூழலில் 3 எதிரிகளுக்கு எதிராக நாம் போரிட வேண்டும்.
நாட்டின் கவுரவம், கண்ணியத்துக்கு களங்கத்தை ஏற்படுத்துவோர், நாட்டில் பிரிவினையைத் தூண்டுவோர், இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானவர்கள் ஆகியோருக்கு எதிராக நாம் போரிட வேண்டும்.
இந்தியாவுக்கு எதிரான சக்திகளை கண்டறிந்து அவர்களை தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.