சென்னை:
மருத்துவர்கள் மக்களின் உயிரை காப்பவர்களாக மட்டும் செயல்படாமல், மனிதநேயம் காப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.
சென்னை கிண்டி அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை சார்பில் உலக விபத்து காய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் தலைமையில் நடந்த நிகழ்வை, சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் தொடங்கி வைத்தார்.
அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர்கள், மருத்துவத் துறையினர் நிகழ்வில் பங்கேற்றனர்.
முன்னதாக, மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் பி.வி.ஏ.மோகன்தாஸ், ஜே.சி.டி.பிரபாகருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உடன் இருந்தார்.
இந்த நிகழ்வில் சட்டப்பேரவை தலைவர் ஜே.சிடி.பிரபாகர் பேசியதாவது:
மருத்துவத் துறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளை முழுமையாக போக்குவதற்கு பாடுபட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஒருமுறை என்னை அழைத்துக்கொண்டு காரில் சென்றபோது, சாலையை கடக்க பாதசாரிகள் காத்திருந்தனர்.
அதை பொருட்படுத்தாமல், எங்கள் காரின் ஓட்டுநர் வாகனத்தை செலுத்தினார்.
அப்போது ஓட்டுநரை எம்ஜிஆர் கண்டித்தார். சாலை விதிகளை அனைவரும் மதிக்க வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தினார்.
அதே பண்புடன், எம்ஜிஆர் மாதிரியே தற்போதைய முதல்வர் விஜய் உள்ளார்.
தனது வாகனம் செல்லும்போது, பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர் வரும் வழியில் எந்த வாகனமும் நிறுத்தப்படுவதில்லை.
இந்த முயற்சியை இதற்கு முன்னால் எவருமே செய்யவில்லை.
விபத்து என்பது ஒரு தனி மனிதருடன் நிற்பதில்லை. அவரது குடும்பத்தை உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கிறது. அதனால், அதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்.
மருத்துவத்துறை மகத்தானது. மருத்துவர்கள் மக்களின் உயிரை காப்பவர்களாக மட்டும் செயல்படாமல், மனிதநேயம் காப்பவர்களாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் பேசிய மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ், “எதிர்பாராத விபத்துகள், அனைவரையுமே நிலைகுலையச் செய்துவிடும்.
விபத்துகளை தவிர்க்க சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். மேலும் அனைவரும் விபத்துக் காப்பீடு வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.