நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் சுமார் 7 கோடி முட்டையின கோழிகள் மூலம் தினசரி 5 கோடியே 50 லட்சம் முட்டைகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.
நாமக்கல்லில் இருந்து ஏற்கனவே துபாய், பக்ரைன், கத்தார், ஓமன், ஆப்பிரிக்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு மாதந்தோறும் சுமார் 15 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா அரசு, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்ததை அடுத்து, முதல் கட்டமாக கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது.
குளிர்சாதன வசதி கொண்ட 21 கன்டெய்னர்களில் தலா 4¾ லட்சம் முட்டைகள் என சுமார் ஒரு கோடி முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த கன்டெய்னர் 30 நாட்களில் அமெரிக்கா சென்றடைந்தது. தொடர்ந்து அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும் என பண்ணையாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்க அரசு 25 சதவீதம் வரி விதித்து உள்ளது.
இது நாமக்கல் பகுதியை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்களுக்கு பேரிடியாக அமைந்து உள்ளது. 25 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பால் நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.
வரி விதிப்பு காரணமாக இந்திய முட்டைகளை வாங்க அங்குள்ள வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் முட்டை ஏற்றுமதி தடைபட்டு உள்ளதாக நாமக்கல் பகுதியை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
முட்டைக்கு ஸ்திரமான சந்தை இருந்தால் தான் விலை சரிவை தடுக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு கோழிப்பண்ணையாளர்கள் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே அமெரிக்க முட்டை ஏற்றுமதி இறக்குமதி வரி உள்பட பல்வேறு காரணங்களால் திடீரென்று பாதிக்கப்பட்டு உள்ளதால் பண்ணையாளர்கள் மற்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்து உள்ளனர்.