பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் இங்கி லாந்து அதிரடியாகக் குவித்த 429 ரன்களை இலங்கை அணி வெற்றிகரமாக 430 ரன்கள் எடுத்து சேஸ் செய்து, அபார வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி ஒன்றில் 435 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்து வென்றதற்குப் பிறகு மிகப்பெரிய விரட்டலை வெற்றிகரமாக சாதித்த அணி என்ற சாதனையை இலங்கை அணி நேற்று நிகழ்த்தியது.
இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் வரலாறு காணாத இங்கிலாந்தின் முதல் ஒருநாள் இரட்டை சதத்தை சாதித்தார். அவர் 116 பந்துகளில் 21 பவுண்டரிகள் 10 சிக்ஸர்களுடன் 202 ரன்கள் விளாச இங்கிலாந்து முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 429 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி அவிஷ்கா பெர்னாண்டோவின் 97, பவன் ரத்னாயக்கேயின் 130, தசுன் ஷனகாவின் 97 (50 பந்துகள்), ஜனித் லியனாகேவின் 61 ரன்கள் போன்ற அதிரடி இன்னிங்ஸ்களினால் ஒரு பந்து மீதம் வைத்து 8 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் என்று வெற்றி பெற்றது.
அதுவும் ஜாஷ் டங் கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து குச்சியைப் பெயர்த்து எடுத்து ஹாட்ரிக் சாதனையில் இருந்தும், 5-வது பந்தில் ஸ்ட்ரைக்கிற்கு வந்த லியனாகே, ஜாஷ் டங்கை லாங் ஆஃப் மேல் சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது உண்மையில் மயிர்க்கூச்செறியும் வெற்றியாக அமைந்தது.
புரூக் இங்கிலாந்தின் முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டி இரட்டைச் சத நாயகன் எனும் அதே வேளையில் இரட்டைச் சதம் அடித்துத் தோல்வி அடைந்த அணியின் கேப்டன் என்ற வேண்டா சாதனையையும் தன்னகத்தே நேற்று கொள்ள வேண்யதாயிற்று.
இலங்கை டாஸ் வென்று முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தது தவறென்று உணரும்படி புரூக்கின் காட்டடி தர்பார் இருந்தது.
புரூக் தனது அதிரடி இன்னிங்ஸில் வழக்கமான ஷாட்களுடன் மட்டும் நின்றுவிடாமல், ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்கூப், பிக்-அப் ஷாட், பிளாட்-பேட் ஷாட் என பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். ஜோ ரூட்டுடன் 159 ரன்களும், வில் ஜாக்ஸுடன் 185 ரன்களும் சேர்த்த அவர், இலங்கை பந்துவீச்சை முற்றிலுமாக சிதறடித்தார்.
இன்னிங்ஸின் கடைசி ஓவரில் நுட்பமான பேடில் ஸ்வீப் மூலம் பவுண்டரி அடித்து 200 ரன்களை எட்டிய புரூக், அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 114 பந்துகளில் 200 ரன்களை எட்டிய அவர், இரண்டாவது சதத்தை வெறும் 39 பந்துகளில் பதிவு செய்தார்.
இதன் மூலம் டெஸ்டில் முச்சதம், ஒருநாளில் இரட்டைச் சதம், டி20 சர்வதேச போட்டியில் சதம் என மூன்று விதமான சாதனைகளையும் படைத்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலுக்குப் பிறகு இரண்டாவது வீரராக புரூக் இணைந்தார்.
தொடக்கத்தில் தடுமாறிய புரூக், முதல் 24 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
ஆனால் கமிந்து மெண்டிஸின் சுழற்பந்துவீச்சில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை விளாசிய பிறகு அவரது ஆட்டம் வேகம் பெற்றது. 42 பந்துகளில் அரைசதம், 75 பந்துகளில் சதம், 97 பந்துகளில் 150 ரன்கள் என அசுர வேகத்தில் ரன்களைக் குவித்தார்.
இங்கிலாந்து இன்னிங்ஸின் கடைசி 10 ஓவர்களில் புரூக்கும் வில் ஜாக்ஸும் இணைந்து 156 ரன்கள் சேர்த்தனர். இலங்கை நான்கு பிரதான பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே களமிறங்கி, ஐந்தாவது பந்துவீச்சாளர் இடத்தை ஆல்ரவுண்டர்களை நம்பியிருந்தது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. கமிந்து மெண்டிஸ், ஷனகா, லியானகே ஆகியோர் இணைந்து 123 ரன்களை வாரி வழங்கினர்.
நடுவர் தீர்ப்புகளை ரிவியூ மூலம் மாற்றி வெற்றி சாதித்த இலங்கை!
அவிஷ்கா பெர்னாண்டோ எல்.பி. தீர்ப்பளிக்கப்பட்டார் ஆனால் அவர் ரிவியூ செய்து தப்பினார். இது அவுட் என்றால் இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் என்று வீடு போய்ச் சேர்ந்திருக்கும்.
ஆனால் ரிவியூவில் மீண்டதோடு ரத்னாயக்கேவோடு இணைந்து 166 ரன்களையும் சேர்த்தார். 97 ரன்களில் பெர்னாண்டோ ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய தசுன் ஷனகா அதிரடியில் இறங்கினார். ரத்னாயக்கேவுடன் இணைந்து 133 ரன்கள் சேர்த்த அவர், இரண்டு முறை அவுட் கொடுக்கப்பட்டும் ரிவ்யூ மூலம் தப்பினார்.
50 பந்துகளில் 6 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் எடுத்த ஷனகா, மீண்டும் சதத்தை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்தார்.
ரத்னாயக்கே 130 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், இலங்கையின் நம்பிக்கை குறையவில்லை. வெற்றி பெற 36 பந்துகளில் 67 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், லியானகே அதிரடியாக ஆடி ஆட்டத்தை மீண்டும் இலங்கையின் பக்கம் திருப்பினார்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர் சாம் கரனுக்கு பனிப்பொழிவு காரணமாக பந்தை சரியாகப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. 9 ஓவர்களில் 103 ரன்களை விட்டுக்கொடுத்த அவர், இங்கிலாந்து சார்பில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மோசமான பந்துவீச்சு சாதனையையே பதிவு செய்தார்.
இறுதியில் இலங்கைக்கு 12 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் 49-வது ஓவரில் ஓவர்டன் வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்து இங்கிலாந்துக்கு நம்பிக்கை அளித்தார். 50-வது ஓவரை ஜாஷ் டங் அற்புதமாகத் தொடங்கினார். லியானகே ஒரு ரன் எடுக்க, வெல்லாலகே ஸ்டம்பை பறிகொடுத்தார்.
அடுத்த பந்திலேயே மலிங்காவும் பவுல்டு ஆக, ஒருமுனையில் ஒரு சிங்கிள் எடுத்துக் கொடுங்கடா முடிச்சுடறேன் என்ற தவிப்போடு நின்று கொண்டிருந்தார் லியனாகே.
3 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டங் ஹாட்ரிக் வாய்ப்பில் இருந்தார். அசிதா பெர்னாண்டோ ஒரு ரன் எடுத்து லியானகேவை மீண்டும் ஸ்டிரைக்கில் நிறுத்தினார்.
அடுத்த பந்தை டங் சற்று மெதுவாக வீசிய நிலையில், அதை எதிர்கொண்ட லியானகே பந்தை லாங் ஆஃப் திசையில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார்.
இலங்கை கொண்டாட்டம் தொடங்கியது. புரூக் அதிர்ச்சியடைந்தார்.