சென்னை:
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் சிறந்த செவிலியர்களுக்கு ஆண்டுதோறும் மாநில அளவில் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் சிறந்த செவிலியர்களுக்கு ஆண்டுதோறும் மாநில அளவில் விருது வழங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதை செயல்படுத்தும் விதமாக சுகாதாரத் துறை செயலர் தாரேஸ் அகமது நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
நோயாளிகளின் நலனுக்காக அன்புடனும் கருணையுடனும் தன்னலமற்ற சேவையாற்றும் செவிலியர்களைக் கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் மே 12-ம் தேதி சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில சிறந்த செவிலியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் இருந்து 3 செவிலியர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தில் இருந்து 3 செவிலியர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்ககத்தில் இருந்து 3 செவிலியர்கள் அல்லது துணை செவிலியர்கள், தனியார் மருத்துவமனைகளில் இருந்து 3 செவிலியர்கள் என மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு செவிலியருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும். இதற்காக 2026-27-ம் நிதியாண்டு முதல் ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
செவிலியர்களின் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பராமரிப்பு, பிரசவ கால சேவைகள், நேரம் தவறாமை, தூய்மை பராமரிப்பு, நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த விருதுக்கான தேர்வு நடைபெறும்.
இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாகச் சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் செயல்படுவார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ரூ.42.72 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,695 தொகுப்பூதிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தேசிய நலவாழ்வுக் குழும விதிகளின்படி, மாவட்ட நலச் சங்கங்கள் மூலமாக தொகுப்பூதிய அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அவசரகால மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்கு 1,039 செவிலியர்கள், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு 656 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று சுகாதாரத் துறை செயலர் தாரேஸ் அகமது வெளியிட்ட மற்றொரு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.