சென்னை:
சென்னையில் ரூ.1,401 கோடியில் 9 இடங்களில் 6,157 புதியஅடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்ட உள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் ஜனவரியில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் எளிய மக்களுக்கான வீட்டு வசதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் 9 இடங்களில் ரூ.1,401 கோடியில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்த
படி அனாதைக்குப்பம் 64 வீடுகள், வியாசர்பாடி பழைய பிளாக் 1,158, பட்டினப்பாக்கம் 1,484, ருக்மணி நகர் 111, முல்லை நகர் 462, உதயசூரியன் நகர் 850, பச்சைக்கல் வீராசாமி தெரு 912, மேற்குக் கல்லறை சாலை 792, கக்கன் காலனி 324 என மொத்தம் 9 இடங்களில் 6,157 வீடுகள் கட்டப்பட உள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பெ.ரமண சரஸ்வதி கூறியதாவது: இம்மாத இறுதிக்குள் மக்களை முழுமையாக வெளியேற்றிவிட்டு பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கும்.
ஜனவரியில் புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, 20 மாதங்களுக்குள் நிறைவடையும்.
புதிதாகக் கட்டப்படும் ஒவ்வொரு குடியிருப்பும் 420 சதுர அடியில் ஒரு படுக்கையறை (1BHK) வசதி கொண்டதாக இருக்கும்.
பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அதே பகுதியில் புதிய வீடுகள் கட்டப்படும்போது, ஏற்கெனவே அங்கு வசித்து வந்த தகுதியான பயனாளிகளுக்கே முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்கப்படும். அவர்கள் ரூ.1.50 லட்சம் செலுத்த வேண்டும். இங்கு பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளை விற்பனை செய்ய அனுமதியில்லை.
பட்டினப்பாக்கம் புதிய குடியிருப்புத் திட்டத்துக்கும், புதிய தலைமைச் செயலக இடத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.