தமிழக தேர்தல் காலங்களில் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் எங்களோடு பயணித்த அந்த பசுமையான நாட்களையும் எண்ணிப்பார்க்கிறேன் – சசிகலா …

தமிழக தேர்தல் காலங்களில் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் எங்களோடு பயணித்த அந்த பசுமையான நாட்களையும் எண்ணிப்பார்க்கிறேன் – சசிகலா …

சகோதரர் விஜயகாந்த் அவர்களின் மறைவு யாராலும் ஈடு செய்ய இயலாதது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சகோதரர் விஜயகாந்த் அவர்களின் மறைவு யாராலும் ஈடு செய்ய இயலாதது.

அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் தனது கடின உழைப்பால், ஒரு நடிகராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சியின் தலைவராக பொறுப்பேற்று, அவர் ஆற்றிய மக்கள் நலப் பணிகளையும், சமூகப் பணிகளையும் தமிழக மக்கள் என்றென்றும் நினைவில் கொள்வார்கள் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது அளவற்ற அன்பினையும், மிகுந்த மரியாதையையும் கொண்டு இருந்ததை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன். தமிழக தேர்தல் காலங்களில் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் எங்களோடு பயணித்த அந்த பசுமையான நாட்களையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.

அன்பு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவரது மகன்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply