ஈஷாவில் களைக்கட்டிய ரேக்ளா பந்தயம் – சீறி பாய்ந்த காளைகள்! – முதல் பரிசாக ரூ.1 லட்சம்

“தமிழ் தெம்பு” திருவிழாவின் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோக மையத்தில் ரேக்ளா பந்தயப் போட்டி இன்று (மார்ச் 17) விறுவிறுப்பாக நடைபெற்றது. 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் இடம் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றி கொண்டாடும் ‘தமிழ் தெம்பு’ என்னும் 9 நாள் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக திகழும் மாட்டு வண்டிப் போட்டி (ரேக்ளா பந்தயம்) ஆதியோகி முன்பு நடத்தப்பட்டது. ஈஷாவில் முதல்முறையாக நடந்த ரேக்ளா போட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இதற்காக, கோவை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவே ஈஷாவிற்கு வருகை தந்தனர். போட்டி காலை — மணிக்கு தொடங்கியது. முதல்கட்டமாக 200 மீட்டர் பந்தயப் போட்டி நடைபெற்றது. தொடக்க புள்ளியில் இருந்து கொடி அசைத்த உடன் 2 நாட்டு மாடுகளுடன் கூடிய ரேக்ளா வண்டி மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்தது. ஒரு வண்டி பந்தய கோட்டை அடைந்த பின்னர் அடுத்த வண்டி அனுமதிக்கப்பட்டது.

ஒவ்வொரு நாட்டு மாடுகளும் காண்போரை அசர வைக்கும் வகையில் எல்லை கோட்டை நோக்கி சீறி பாய்ந்தன. 200 மீட்டர் போட்டி நிறைவு பெற்ற பின்னர் 300 மீட்டர் போட்டி நடத்தப்பட்டது. இவ்விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

இரண்டு பிரிவிலும், முதல் இடம் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 2-ம் பரிசாக ரூ.50,000, 3-ம் பரிசாக ரூ.25,000, 4-ம் பரிசாக ரூ.15,000 வழங்கப்பட்டது. இதுதவிர 5 முதல் 15 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.3,000-மும், 16 முதல் 30 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.2,000-மும் பரிசு தொகையாக வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *