அடுத்த 6 மாதங்கள் ஒரு அதிபராக எனது பணியை செய்வதில் கவனம் செலுத்துவேன் – அதிபர் ஜோ பைடன்!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) களமிறங்கியுள்ளார்.

அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78) களமிறங்கியுள்ளார்.

ஆனால், வயது முதிர்வு, டிரம்புடனான விவாதத்தின்போது திணறல், உள்ளிட்ட சர்ச்சைகளால் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. கட்சியினரின் அதிருப்தி அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்த ஜோ பைடன், அதற்கான அறிவிப்பையும் கடந்த 21-ம் தேதி வெளியிட்டார்.

தொடர்ந்து, கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவுத்து தன்னுடைய முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பைடன் தனது ஜனநாயகக் கட்சி மற்றும் நாட்டின் நலன்களை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். அத்துடன், கமலா ஹாரிசை அதிபர் தேர்தலில் நிறுத்துவதாக ஜோ பைடன் கூறினார்.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து ஜோ பைடன் பேசியதாவது, “அமெரிக்காவை ஒன்றிணைக்க புதிய தலைமுறைக்கு இடம்கொடுப்பதே சிறந்த வழி என எண்ணி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 6 மாதங்கள் ஒரு அதிபராக எனது பணியை செய்வதில் கவனம் செலுத்துவேன். வெறுப்பு, தீவிரவாதங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன். எந்த வன்முறைக்கும் அமெரிக்காவில் இடமில்லை. அமெரிக்கா வலுவாகவும், பாதுகாப்பாகவும், சுதந்திர உலகின் தலைவராகவும் உள்ளது.

கமலா ஹாரிஸ் மிகவும் திறமையானவர். அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். துணை அதிபராக தேசத்தை வழிநடத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்.

இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவின் எதிர்காலத்தை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். எனது விருப்பத்தை தெரிவித்தேன். இப்போது தேர்வு அமெரிக்க மக்களுடையது.” என்று பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *