சென்னை:
தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சினிமா படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் குடும்பத்துடன் வெளிநாடுகள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து வரும் நயன்தாரா சமீபத்தில் தமிழ்நாடு வடமாநிலங்கள் மற்றும் கேரளாவில் உள்ள பல கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுப் பயணம் செய்தார்.
இதனிடையே, நயன்தாரா இன்று 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். நள்ளிரவு குடும்பத்தோடு கேக் வெட்டி நயன்தாரா பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரை உலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஹாய்’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
படக்குழு வெளியிட்ட அந்த போஸ்டரில் ரஜினி, கமல் படங்களுக்கு இடையே நயன்தாரா நிற்பது போன்று உள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
விஷ்ணு எடவன் இயக்கும் இப்படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் தொடர்பாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.