எப்ப போனாலும் ரூ.500… எந்த அரசு அலுவலகத்திற்கு போனாலும் லஞ்சம்…. கொதித்து போய் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்திய விவசாயி…

வேலூர் ;

கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாரதி. இவருக்குச் சொந்தமான நிலத்திற்கு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்த நிலையில், இணைப்பு கட்டணமாக 11,420 ரூபாய் கட்டணமாகச் செலுத்தியுள்ளார்.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை மின் இணைப்பை வழங்காமல் மின் வாரிய அதிகாரிகள் கால தாமதம் செய்து வந்துள்ளனர். இதனால் நீர் இல்லாமல் தென்னை மரம் மற்றும் பயிர்கள் கருகிச் சேதமடைந்துள்ளது. மின் இணைப்பு குறித்துக் கேட்கும்போதெல்லாம் அதிகாரிகள் அலைக்கழித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி பாரதி இதுவரை நடந்தவற்றை மனுவாகக் கொடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது, “ஒவ்வொரு முறை அந்த அலுவலகத்திற்கு விசாரணைக்காகச் செல்லும் பொழுது 500 ரூபாய் கொடு 500 ரூபாய் கொடு எனப் பணம் வாங்குகின்றனர். இதே போல் வருவாய்த் துறை அலுவலகத்திற்குச் சென்றாலும் பணம் கொடு சான்றிதழ் தருகிறோம் எனக் கேட்கின்றனர்.

இப்படி சான்றிதழ் வாங்குவதற்காக இந்த அலுவலகங்களுக்கு ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் பணமாகத் தர வேண்டியுள்ளது. அதன் பின் மொத்தமாகவும் லஞ்சம் கேட்கின்றனர். அப்படி வாங்கினாலும் வேலையை முடித்துத் தர மாட்டேன் எனக் கூறுகிறார்” என்று புகார் கூறினார். 

பின்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு விவசாயியை அனுப்பி வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *