ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா : இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்!!

சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி சக்தி ஸ்தலங்களில் ஒன்றான இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு கும்ப பூஜை, யாக பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது பால், பன்னீர், ஜவ்வாது, தேன், இளநீர், தயிர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

திருவிழாவை காண மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் வசதிக்காக ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

கோவிலுக்கு வந்த பக்தர் கள் அம்மனை வேண்டி ஆயிரம் கண்பானை, தவழும் பிள்ளை, கரும்பு தொட்டில் குழந்தை, அக்கினிச்சட்டி, மாவிளக்கு பறக்கும்காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

இன்று மாலை இரண்டு மணிக்கு மேல் ஆடிப்பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான உற்சவர் அம்மன் ரிஷப வாகன பல்லக்கில் ஊர்வலமாக தெருக்களில் வீதியுலா வந்து ஆற்றில் இறங்கி கோவில் சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறும்.

கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிக்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் இரண்டு கூடுதல் சூப்பிரண்டுகள் மற்றும் 4 டி.எஸ்.பி.க்கள் உட்பட சுமார் 2,000-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவிழா ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *